செய்யூர் பக்கிங்காம் கால்வாய் மேம்பால இணைப்பு சாலை பணி: தாமதமாக நடைபெறுவதாக பொது மக்கள் புகார்

செய்யூர் பக்கிங்காம் கால்வாய் மேம்பால இணைப்பு சாலை பணி: தாமதமாக நடைபெறுவதாக பொது மக்கள் புகார்
Updated on
2 min read

செய்யூரில் இருந்து எல்லையம்மன் கோயில் வழியாக, கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் வழியில் பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது. இந்தக் கால்வாயில் உள்ள தரைப்பாலம் வழியாக 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் செய்யூருக்கு வந்து செல்கின்றனர்.

பக்கிங்காம் கால்வாயில் செல்லும் தண்ணீர் மழைக் காலங்களில் இந்த சாலை மீது கரைபுரண்டு செல்வதால், மேற்கண்ட கிராம மக்கள் 5 கி.மீ. சுற்றிக்கொண்டு, பவூஞ்சூர் வழியாக செய்யூருக்கு செல்லும் நிலை உள்ளது.

இதனால், பக்கிங்காம் கால்வாயின் அருகே உள்ள உப்பளங்களுக்கு உபரித் தண்ணீர் செல்லும் வகை யிலும் இரு கரையிலும் மேம்பாலம் அமைத்து, கால்வாயின் நடுவே இணைப்பு சாலை அமைக்கவும் கடந்த 2013 ஆண்டு 3.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதில், மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பின், 2 மேம்பாலங்களுக்கும் இடையே 347 மீட்டர் அகலத்தில் உள்ள கால்வாயில், இணைப்பு சாலை அமைக்க, கிராவல் மண் மூலம் மண்மேடு அமைக்கப்பட்டது.

இந்தச் சாலை பணிகளால் கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில், சாலையை இரண்டாக பிரித்து பணிகள் நடைபெற்றன. ஒருபகுதியில் பணிகள் நடக்க, மற்றொரு புறம் போக்குவரத்துத் தொடர்ந்தது.

இந்நிலையில், 2014 ஜூன் 21-ம் தேதி கால்வாயின் நடுவே கொட்டப்பட்ட மண்ணில் திடீரென விரிசல் ஏற்பட்டு, 100 மீட்டர் தூரம் வரை சாலை உள்வாங்கியது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பவுஞ்சூர் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. கிராவல் மண்ணை பரிசோதனை செய்ததில், கிராவல் போதுமான வலு சேர்க்கும் தன்மையற்றது என தெரியவந்தது.

இதையடுத்து, கால்வாயில் உள்ள மண் மேட்டில், ஒவ்வொரு 5 அடிக்கும் இடையே 8 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, ஆற்று மணல் கொட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், சாலைக்கு அழுத்தமான பிடிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டது. இப்பணியைத் தொடர்ந்து, அதன் மீது தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மறு திட்ட மதிப்பீட்டின் கீழ் கூடுதலாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. தற்போது பணிகளை விரைந்து முடிக்காமல் நெடுஞ்சாலைத் துறையினர் தாமதப்படுத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது: போக்குவரத்துக்காக கிராம மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காகவே, பக்கிங்காம் கால்வாயில் இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுகின்றன. இதனால், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் மறுபகுதி சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ரமேஷிடம் கேட்டபோது, ‘‘பணிகள் தாமதம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. கடந்த டிசம்பர் மாதம் கடுமையான மழை பெய்ததால், பக்கிங்காம் கால்வாயில் பாலத்தின் மீது தண்ணீர் சென்றது. அதனால் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன்பின் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வரும் மே மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும்’’ என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in