Published : 02 Feb 2022 07:23 AM
Last Updated : 02 Feb 2022 07:23 AM
கோவை: அரசு நிர்வாகம் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் உதவியுடன் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதிலும், சுயசார்பு திட்டத்தின்கீழ் தொழில்துறையை ஊக்குவிப்பதிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு நேற்றைய நிதிநிலை அறிக்கையிலும் எதிரொலித்தது. நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய ராணுவ தளவாடங்கள் கொள்முதல் உள்நாட்டில் 68 சதவீதம் வரை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, தொழில்நுட்ப பங்களிப்பு சார்ந்த தொழில்துறையினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவையில் செயல்படும் ‘மேக்’ நிறுவனத்தின் மூலம் ஏவுகணைக்கு தேவையான தொழில்நுட்ப பங்களிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு தொடர்பாக, ‘மேக்’ நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
அறிவியல் வல்லுநர்கள் ஹோமிபாபா, அப்துல்கலாம் உள்ளிட்டோர் உள்நாட்டு உற்பத்தியை அதிகம் வலியுறுத்தியுள்ளனர். இதனடிப்படையில், ஏவுகணை தயாரிப்பில், பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ நிறுவனத்தோடு, மேக், டாடா, காட்ரேஜ் ஆகிய தனியார் துறைகளின் பங்களிப்பும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, ஏவுகணை தயாரிப்பில் எங்களது தொழில்நுட்ப பங்களிப்பு அதிகம். விமானங்கள் தரையிறங்கிய பின்னர் அதை சர்வீஸ் செய்வதற்கான தொழில்நுட்பங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
விமானங்களின் நடமாட்டத்தை கண்டறியும் ரேடார் கன்ட்ரோல் தொழில்நுட்பங்களிலும் எங்களது பங்களிப்பு உள்ளது. அரசு, தனியார்துறை பங்களிப்பால் உலகிலேயே உள்நாட்டு ஏவுகணை உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்தியா முன்னணியில் உள்ளது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுவது 58 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல், வெளிநாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்படும். இதுவரை ஆர்.என்.டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தினர், பாதுகாப்பு சார்ந்த கொள்முதல் ஆர்டர்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் போன்ற அரசு நிறுவனங்களிடம் மட்டுமே அளித்து வந்தனர். தற்போதைய மத்திய அரசின் அறிவிப்பின் மூலம், இதில் 25 சதவீதம் கொள்முதல் எங்களைப் போன்ற தனியாருக்கும் கிடைக்கும்.
ஆர்.என்.டியிடம் தனியார் துறையைச் சேர்ந்த நாங்களும் சென்று, எங்களது தொழில்நுட்பங்களைத் தெரிவித்து ஆர்டர் எடுக்கலாம். ஆர்டர் கிடைத்தால் தரையில் இருந்து 50 ஆயிரம் அடி உயரத்தில் செல்லும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் ‘லேசர் கன்’ போன்ற பல்வேறு பாதுகாப்புத் தளவாடங்களை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நாங்கள் விரைவாக தயாரித்து கொடுக்கலாம். நாட்டின் வளர்ச்சி மட்டுமின்றி, தொழில்துறையின் உற்பத்தி மேம்பாட்டுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். நம்மிடம் திறமை, தொழில்நுட்பம் உள்ளது. அதேசமயம், உள்நாட்டு கொள்முதல் 68 சதவீதம் என்ற மத்திய அரசின் முடிவு விரைவாக செயல்பாட்டுக்கு வர ‘டிபென்ஸ் காரிடர்’ பணிகளை கால நிர்ணயம் செய்து விரைவாக அமைக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT