Published : 25 Apr 2016 07:39 AM
Last Updated : 25 Apr 2016 07:39 AM

ஜெ., கருணாநிதி இன்று வேட்புமனு தாக்கல்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகரிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 16-ம் தேதி நடக்கிறது. இந் நிலையில், கடந்த 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அன்று ஒரு சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 83 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை தினங்கள் என்பதால் மனு தாக்கல் இல்லை. இதையடுத்து, இன்று மீண்டும் மனு தாக்கல் தொடங்குகிறது.

முதல்வர் மனு தாக்கல்

ஆளுங்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை, 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தான் கடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். இன்று பகல் 12.30 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்யும் அதே நாளில், மற்ற 233 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா மட்டுமே இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். மற்றவர்கள் வரும் 28-ம் தேதி மனு தாக்கல் செய்வார்கள் என அதிமுகவினர் தெரிவித்தனர்.

பகல் 12.30 மணிக்கு மனு தாக்கலை முடித்துவிட்டு, போயஸ் கார்டன் இல்லத்துக்கு திரும்பும் முதல்வர் ஜெயலலிதா, மாலை 3.30 மணிக்கு புதுச்சேரி பிரச்சாரக் கூட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

கருணாநிதி மனு தாக்கல்

அதேபோல, திமுக தலைவர் மு.கருணாநிதி தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் இன்று மனு தாக்கல் செய்கிறார். இத்தொகுதியில் 2-வது முறையாக கருணாநிதி போட்டியிடுகிறார். மயிலாடுதுறையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி, அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்று இரவில் தங்கினார்.

இன்று காலை 11 மணி அளவில் காட்டூரில் உள்ள, தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத் துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கிறார். மதியம் 1.50 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு, தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, வேட்புமனு தாக்கல் செய்கிறார். பின்னர் மீண்டும் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கும் அவர், இரவு 7 மணிக்கு தெற்கு வீதியில் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இரவு திருவாரூரில் தங்கிவிட்டு, நாளை (ஏப்ரல் 26) அங்கிருந்து புறப்பட்டு கொரடாச்சேரி, நீடாமங்கலம் வழியாக தஞ்சைக்கு சென்று, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப் பட்டுள்ள சிம்லா முத்துச் சோழனும் இன்று மனு தாக்கல் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x