Published : 02 Feb 2022 10:21 AM
Last Updated : 02 Feb 2022 10:21 AM

தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்: கோவை தொழில் துறையினர் வரவேற்பு; சிறு தொழில் துறையினர் ஏமாற்றம்

கோவை

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைகுறித்து கோவை தொழில் துறையி னர் பல்வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வீ.கார்த்திக்: மாநிலங்களுக்கு கடன் அளித்து உதவ ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. பிரதம மந்திரியின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப் படும் என்பதும், 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கான தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை 2022 –2023-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதும், அவசர கால கடன் திட்டம் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும், இதன்அளவை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்க செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், அவசர கால கடன் திட்டத்தின் அளவை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தாதது ஏமாற்றமளிக்கிறது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதிக்கச் செய்யும்.

இந்தியத் தொழில் வர்த்தக சபை (கோவை கிளை) தலைவர் சி.பாலசுப்ரமணியன்: நாட்டின் பொருளாதார வளர்ச் சியை மேம்படுத்துவதற்காக சில முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பன்முக மாதிரி சரக்கு போக்குவரத்து பூங்காக்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. தொழில் நகரமானகோவையின் நீண்ட கால எதிர்பார்ப் புகளில் இதுவும் ஒன்றாகும். வைரத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. நகை உற்பத்தி மையமான கோவைக்கு இதன் மூலமாக பயன் கிடைக்கும். பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்துறையில் வளர்ந்து வரும் கோவையானது இதன் மூலமாக பயன்பெற வாய்ப்புள்ளது.

இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடி எஃப்) தலைவர் பிரபு தாமோதரன்: புதிதாக ஆரம்பிக்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான ஊக்கச்சலுகையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்திருப்பது புது முதலீடுகளை ஊக்கப்படுத்தும். தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி விவசாய விளை பொருட்களின் விளைச்சலை அதிகரிக்கும் முயற்சிக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்தியத் தொழிலக கூட்ட மைப்பு (சிஐஐ கோவை கிளை) தலைவர் அர்ஜூன் பிரகாஷ்: மத்திய நிதி நிலை அறிக்கை தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 5ஜி, டிஜிட்டல் கரன்சி, ட்ரோன் தொழில்நுட்பம், பாரத் நெட் திட்டம், எலக்ட்ரானிக்ஸ் துறை மேம்பாடு என பல்வேறு வரவேற்புக்குரிய அறிவிப்புகள் உள்ளன.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார்: அவசர கால கடன் தொகை உயர்வு, பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த எவ்வித அறிவிப்புகளும் இல்லை. வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுதல், வங்கிகடன்களை திருப்பி செலுத்துவதற் கான கால நீட்டிப்பு, தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லாதது போன்றவை கரோனா தொற்றின் தாக்கத்தால் நலிவடைந்துள்ள தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

கோசியா (கோவை கம்ப்ரஸர் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன்) தலைவர் எம்.ரவீந்திரன்: இரும்பு ஸ்கிராப் மீதான சுங்கவரி விலக்கை மேலும் ஓராண்டுக்குநீட்டித்துள்ளது, சிறு தொழில் களுக்கு அரசு நிறுவனங்கள் தர வேண்டிய பில் தொகையில் 75 சதவீதத்தை 7 நாட்களுக்குள் கொடுப்பதற்கு விதிமுறை கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

மூலப்பொருட்களின் விலை யைக் கட்டுப்படுத்த உருப்படியான நடவடிக்கைகள் இல்லை. குறுந் தொழில்கள் வாங்கும் மற்றும் விற்கும் பொருட்களுக்கான வரியை5 சதவீதமாக குறைப்பது குறித்த அறிவிப்பு இல்லை.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் கே.மணிராஜ்: சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் திறன் மேம்பாட்டு புத்துணர்வு பயிற்சிகள் இணையம் வழியாக வழங்கப்படும், தொழில் தொடங்குவதை எளிதாக்க ஒற்றைச்சாளர முறை, புதிய தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குமேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேநேரத்தில், மூலப்பொருட்கள் விலை உயர்வைக் குறைக்க எடுக்கப்படும் உடனடி நடவடிக்கைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றமாக உள்ளது.

தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) துணைத் தலைவர் எஸ்.சுருளிவேல்: ஐாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி அளிக்கப்படவில்லை என்பதும், தனிநபர் வருமான வரி எந்த வித மாற்றமும் இல்லாமல் இருப்பது போன்ற அம்சங்கள் ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர்கள் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ்: சிறு, குறு தொழில்களை நடைமுறை சிக்கல்களில் இருந்து பாதுகாக்க எவ்வித அறிவிப்பும் இல்லை, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் முடங்கிக் கிடக்கும் குறு, சிறு தொழில்களுக்கு உதவிட முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் ரவி சாம்: பருத்தியை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொள்முதல்செய்ய இந்திய பருத்தி கழகத்துக்கு ரூ.17,683 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது, கடந்த கால இழப்பை ஈடுகட்ட உதவும்.

கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு: வரும் 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும், 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் உற்பத்தியை உருவாக்குவதாகவும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் அமைந்துள்ளது. கரோனா தாக்கத்தில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் மீண்டு வரவரும் 5 ஆண்டுகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான ரேம்ப் திட்டம் வரவேற்புக்குரியது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்பதால் ஆயுத இறக்குமதி குறையும். ட்ரோன் சக்தி திட்டம் மூலமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு வகையில் பயன் பெறும்.

கொசிமா தலைவர் பி.நல்லதம்பி: நிதி நிலை அறிக்கையில் சோலார் மின் உற்பத்திக்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. ஜாப் ஒர்க் பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படாதது, சிறு, குறு தொழில்களுக்கு மூலதன கடன் மானியம் அதிகரிக்கப் படாதது போன்ற விஷயங்கள் ஏமாற்றமளிக்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x