இன்று உலக ஈர நில தினம்: கோவை குளங்களில் பல்லுயிர்களின் வாழ்வியல் சூழல் மேம்படுத்தப்படுமா?

இன்று உலக ஈர நில தினம்: கோவை குளங்களில் பல்லுயிர்களின் வாழ்வியல் சூழல் மேம்படுத்தப்படுமா?
Updated on
2 min read

கோவையில் நொய்யலைச் சார்ந்து உக்குளம், கிருஷ்ணாம்பதி, பேரூர் பெரிய குளம், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர், குறிச்சி, வெள்ளலூர் குளங்கள் உள்ளிட்ட 25 குளங்கள், நொய்யலை சாராத சின்னவேடம்பட்டி, சர்க்கார் சாமகுளம், அக்ரஹாரசாம குளம் உள்ளிட்ட 7 குளங்கள் என மொத்தம் 32 குளங்கள் உள்ளன. நொய்யலைச் சார்ந்துள்ள 25 குளங்களில் மட்டும் 485.87 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த குளங்கள் மூலம் 9,345 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த குளங்கள் முக்கிய காரணமாகின்றன. பல்லுயிர்களின் வாழ்விடமாகவும் உள்ள இந்த குளங்களின் கரைகளில் நொய்யல் சீரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின்கீழ் கான்கிரீட் கரைகள் அமைத்து அவற்றின் இயற்கை சூழலை மாற்றிவிட்டனர். அதோடு, பெரும்பாலான குளங்களில் நேரடியாக கழிவுநீர் கலந்து மாசுபட்டு வருகிறது. இருப்பினும், அரசு நினைத்தால் குளங்களின் இயற்கை சூழலை மீட்டெடுக்க இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் சூழலியல் ஆர்வர்கள்.

இதுதொடர்பாக இயற்கை, பட்டாம்பூச்சி அமைப்பின் (டிஎன்பிஎஸ்) தலைவர் பாவேந்தன், கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்) தலைவர் பி.ஆர்.செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:

கோவையில் அதிகபட்சமாக ஆச்சான் குளத்தில் 224 வகை பறவைகளும், கிருஷ்ணாம்பதி குளத்தில் 187, உக்குளத்தில் 185 வகை பறவைகளும் தென்பட்டுள்ளன. குளத்துக்குள்ளும், கரை அருகிலும் இரைதேடும் பறவைகள் இளைப்பாறவும், இனப்பெருக்கத்துக்காக கூடுகட்டவும் அவற்றுக்கு இடம் தேவை. அதற்கு ஏற்ற இடமும், மரங்களும் பெரும்பாலான குளங்களில் இல்லை. எனவே, குளத்துக்குள் குறுந்தீவுகளை உருவாக்கி, குளக்கரையில் சரியான மரங்களை வளர்க்க வேண்டும்.

குளத்தை சுற்றியுள்ள பல்வேறு செடிகள் பட்டாம்பூச்சிகளுக்கு வாழிடமாக உள்ளன. உதாரணமாக சிங்காநல்லூர் குளத்தில் மட்டும் இதுவரை 108 வகை பட்டாம்பூச்சிகளும், வெள்ளலூர் குளத்தில் 83 வகை பட்டாம்பூச்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

குறு வனத்தை உருவாக்கலாம்

குளங்களைச் சுற்றியுள்ள களைச்செடிகளை கண்டறிந்து, அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் தங்குவதற்கு ஏற்ற நாட்டு மரக்கன்றுகள், செடிகளை நடலாம்.

சிங்காநல்லூர் குளத்தில் காணப்படுவதுபோல கரையின் இருபுறமும் செடிகள், மரங்களுடன் நடுவில் நடைபாதைக்கு இடம் இருந்தால், அது குறுவனம் போல காட்சி அளிக்கும். இயற்கை குறித்த கல்வியை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படுத்தவும் இந்த குளக்கரைகளை பயன்படுத்த முடியும். குளத்தில் உள்ள பறவைகள், பட்டாம்பூச்சிகள், செடிவகைகள், அவற்றின் முக்கியத்துவத்தை படக்காட்சிகளாக விளக்கும் பதாகைகளை ஆங்காங்கே வைக்கலாம். வெள்ளலூர், சிங்காநல்லூர், ஆச்சான்குளம், சூலூர் குளங்களில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பல குளங்களில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து குளத்துக்குள் விட உடனடி நடவடிக்கைகள் தேவை. அப்போதுதான் நீர் மாசுபாட்டை குறைக்க முடியும். குளங்களின் இயற்கை சூழலை மேம்படுத்த வனத்துறை, வேளாண் பல்கலைக்கழகம், ஆனைகட்டியில் உள்ள பறவைகள் ஆராய்ச்சி மையம், தன்னார்வ அமைப்பினர், உள்ளூர் மக்கள், உள்ளாட்சி அமைப்பினர் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை நடத்தி கலந்தாலோசித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழுவில் விவாதிக்கப்படும்

இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலரும், ஈர நில மேலாண்மை குழுவின் உறுப்பினர் செயலருமான டி.கே.அசோக்குமார் கூறும்போது, “குளத்துக்கு உள்ளேயும், அதனை ஒட்டியும் இயற்கை சூழலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து வருவாய்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், வேளாண் பொறியியல் துறையினர் உள்ளிட்டோரை உறுப்பினர்களாக கொண்ட ஈர நில மேலாண்மை குழுவின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in