

மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் விதமாக உள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக அகில இந்திய தலைவர் நரேந்திரகுமார் கோயங்கா தெரிவித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல்: மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறோம். நெருக்கடியான காலத்தில் இந்த பட்ஜெட் தொழில்துறையினருக்கு சிறப்பானதாக இருக்கும் என கருதுகிறேன். பட்ஜெட் அனைத்து துறைகளையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் உள்ள போதிலும், சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர கால கடன் திட்டம் நீட்டிப்பு மற்றும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு போன்றவை வரவேற்கத்தக்கது. மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம்: உழவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக, வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக பின்னலாடைத் தொழில் உள்ளது. இதற்காக, தனியாக வாரியம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு இல்லை. இது கவலையளிக்கிறது. பின்னலாடை தயாரிப்புக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில ஆடைகளுக்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவசரக்கடன் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்காக கூடுதலாக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன் பெறாத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பலனடையும்.
சைமா சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில்களை சீராக்க திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கான சலுகை மற்றும் கடன் வசதி நீட்டிப்பு செய்துள்ளதை வரவேற்கிறோம். வருமான வரி அறிக்கையை திருத்தம் செய்துகொள்ள 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்துள்ளது புதிய அம்சமாக உள்ளது. இந்த பட்ஜெட்டில், பின்னலாடைத் தொழிலுக்கு ஆதரவோ, ஊக்கமோ அளிக்கும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லாதது, வருத்தமாக உள்ளது. பின்னலாடை நூல் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. எனவே நூல் விலையை குறைப்பதற்கான வழிகளை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி. முத்துரத்தினம்: பட்ஜெட்டில் பின்னலாடைத் தொழில் குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாதது, ஏமாற்றம் அளிக்கிறது. பெயரளவுக்கு ஒரு சில திட்டங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.