Last Updated : 02 Feb, 2022 10:43 AM

 

Published : 02 Feb 2022 10:43 AM
Last Updated : 02 Feb 2022 10:43 AM

இயற்கை காட்சிகள், வன விலங்கு ஓவியங்களை வரைந்து அரசுப் பள்ளிகளை மெருகூட்டும் ‘பட்டாம் பூச்சிக்குழு’ - பெற்றோர், மாணவர்கள் மத்தியில் வரவேற்பு

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊர்கலிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுவரில் ஓவியம் தீட்டும் பட்டாம்பூச்சிக் குழுவினர்.

நாமக்கல்

கொல்லிமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்கலிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கிய பட்டாம்பூச்சிக் குழுவினர் வண்ணம் தீட்டி பல்வேறு ஓவியங்களை வரைந்தது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தனியார் பள்ளிகள் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகளையும் மாற்றும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கிய ‘பட்டாம்பூச்சிக் குழு’.

இக்குழுவில் இடம் பெற்ற ஆசிரியர்கள் தங்களது விடுமுறை தினத்தில் அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து பள்ளி சுற்றுச்சுவர், வகுப்பறை உள்ளிட்டவற்றில் மாணவர்களை கவரும் வண்ணங்களில் விலங்குகள், இயற்கை காட்சிகள் உள்ளிட்ட அழகிய படங்களை வரையும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிம் ஊர்கலிங்கம்பட்டி தொடக்கப்பள்ளியை இக்குழுவினர் தேர்வு செய்து பல்வேறு ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தியுள்ளனர். இது பள்ளி செல்லும் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் பாண்டியன் நகர் அரசு தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும் பட்டாம்பூச்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அ.சந்தோஷ் கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு பட்டாம்பூச்சிக் குழு தொடங்கப்பட்டது. திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எங்கள் குழுவில் உள்ளனர். எங்களின் நோக்கம் பள்ளிகளை அழகுபடுத்துவதாகும்.

மலைப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகள் என பட்டியலிட்டு விடுமுறை தினங்களில் அப்பள்ளிகளுக்கு சென்று ஓவியப் பணி மேற்கொண்டு வருகிறோம். கடந்த பொங்கல் விடுமுறையின்போது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊர்கலிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வண்ணம் தீட்டி ஓவியங்கள் வரைந்துள்ளோம்.

நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இயற்கை காட்சிகள், வன விலங்குகள் உள்ளிட்ட ஓவியங்களை வரைந்துள்ளோம். மாணவர்கள் இவற்றை பார்த்து எளிதில் கற்கும் வகையில் ஓவியங்கள் வரையப்படுகிறது. ஓவியம் வரைவது, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் அனைத்தும் எங்கள் குழுவில் உள்ள ஆசிரியர்களே பகிர்ந்து கொள்வோம்.

வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இப்பணியை மேற்கொண்டு வருகிறோம். குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x