Last Updated : 05 Apr, 2016 09:27 AM

 

Published : 05 Apr 2016 09:27 AM
Last Updated : 05 Apr 2016 09:27 AM

234 தொகுதிகளிலும் இரட்டை இலை- அதீத நம்பிக்கையுடன் களமிறங்கும் அதிமுக!

தமிழக தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக...

அதிமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இந்த சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அந்த அணியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுகவில் இருந்து வெளி யேற்றப்பட்ட எம்ஜிஆர், 1972-ல் அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, முதல்முறையாக 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 200 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர்.

அதன் பிறகு 1980-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 177 தொகுதிகளிலும், 1984-ம் ஆண்டு தேர்தலில் 155 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் அதிமுக (ஜெ) அணி எனவும், ஜானகி எம்ஜிஆர் தலைமையில் அதிமுக (ஜா) அணி எனவும் அக்கட்சி பிளவுபட்டது. அதன்காரணமாக 1989 பேரவைத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரபூர்வமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக (ஜெ) அணி வேட்பாளர்கள் 198 தொகுதிகளில் சேவல் சின்னத்திலும், அதிமுக (ஜா) அணி வேட்பாளர்கள் 175 தொகுதிகளில் இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து, அதிமுக ஒன்றுபட்டது. அதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்கள் 168 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். 1996-ம் ஆண்டு தேர்தலில் 168 தொகுதிகளிலும், 2001-ம் ஆண்டு 141 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக வேட்பாளர்கள் தேர்தலைச் சந்தித்தனர். 2006-ம் ஆண்டில் 188 தொகுதிகளிலும், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 165 தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் களம் கண்டது.

இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். அந்தப் பட்டியலில் அதிமுக வேட்பாளர்கள் 227 பேர் இடம்பெற்றுள்ளனர். தோழமைக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் எல்லா தோழமைக் கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. இதனால், அதிமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே தேர்தலை சந்திக்கும் சிறப்பை அக்கட்சி பெற்றுள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஞானி கூறியதாவது:

ஏற்கெனவே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாநிலக் கட்சி மேற்கொண்ட மிகவும் துணிச்சலான முடிவாக அது கருதப்பட்டது.

அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றியால் பெரும் துணிச்சல் பெற்ற அதிமுக, வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை என்று கருதுகிறது. மேலும், தமிழகத்தில் தாங்கள்தான் மிகவும் பலமான கட்சி என்பதை மக்களுக்கு காட்ட அதிமுக விரும்புகிறது. அதன் வெளிப்பாடாகவே அதிமுக மட்டுமின்றி, அந்த அணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்திலேயே ஜெயலலிதா களத்தில் இறக்கியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.மணி கூறியதாவது:

தமிழகத்தின் 234 தொகுதிக ளிலும் இரட்டை இலை சின்னத்தில் தமது அணி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை வெளிப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவுக்கு எதிர் முகாமில் இருப்பவர்கள் பல அணிகளாக சிதறி நிற்கின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த பலவீனத்தை ஜெயலலிதா மிகவும் துல்லியமாக புரிந்து வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்த பலவீனமே அதிமுகவின் பலமாக மாறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x