Published : 02 Feb 2022 07:12 AM
Last Updated : 02 Feb 2022 07:12 AM

மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில் அமைப்புகளின் வரவேற்பும், எதிர்ப்பும்

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் சி.கே.ரங்கநாதன்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில் துறையைப் பொறுத்தவரை பட்ஜெட்டில் எந்த மாற்றமும் இல்லை. பொதுஅறிவிப்பில் உட்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மூலதன முதலீட்டுக்கு ரூ.10.68 லட்சம் கோடி, பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி, 3.8 கோடி வீடுகளுக்கு குழாய்கள் வழியாக குடிநீர் வழங்க ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான உத்தரவாதக் கடன் வழங்கும் திட்டம் 2023 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நடப்பாண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வேளாண் துறையில் உரம் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் வரவேற்கக் கூடியவை. அதேசமயம், நிதிப் பற்றாக்குறை 6.9 சதவீதமாக இருக்கும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. மொத்தத்தில் நாட்டின் தற்போதைய வளர்ச்சியை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

சென்னை வர்த்தக சபை தலைவர் வத்ஸ்ராம்: மத்திய அரசின் பட்ஜெட் நீண்டகால முன்னேற்றத்துக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. உள்நாட்டில் தயாரித்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பட்ஜெட்டாகவும் உள்ளது. குறிப்பாக, உட்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

வளரும் மூலதன உருவாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் திறன்கள் வாயிலாக நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பு தமிழக தலைவர் ஜி.எஸ்.கே.வேலு: விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்துவது, 2025-ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு வழங்குவது ஆகிய அறிவிப்புகள் முக்கியனமானவை.

வேளாண் தொழில்முனை வோருக்கு நபார்டு வங்கி வாயிலாக நிதியுதவி வழங்குவது நல்ல முயற்சியாகும். மூலதனச் செலவு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையால், கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகும். மொத்தத்தில் பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதற்கான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

இந்திய மருத்துவ உபகர ணங்கள் தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத்: மத்திய பட்ஜெட் நாங்கள் எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக அமைந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் 80 முதல் 85 சதவீதம் வரை இறக்குமதியைச் சார்ந்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் எவ்வித யோசனைகளும் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் இந்தப் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்கப் (டான்ஸ்டியா) பொதுச் செயலர் வே.நித்தியானந்தன்: சிறு, குறுந் தொழில்களை பாதுகாக்கவும், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையச் செய்யவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் பட்ஜெட்டில் சலுகைகள் அளிக்க வேண்டும், புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும், வரி விலக்குகளை அறிவிக்க வேண்டுமெனக் கேட்டிருந்தோம். ஆனால், எந்த கோரிக்கையையும் நிதியமைச்சர் அறிவிக்காதது மிகவும் அதிர்ச்சியாகவும், அதிருப்தி அளிப்பதாகவும் உள்ளது.

இரும்பு, அலுமினியம், தாமிரம்ஆகியவற்றின் மூலப் பொருட்கள் விலை 50 முதல் 250 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அவற்றைக் குறைக்கக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்திய போதும், விலையை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மொத்தத்தில் இந்தபட்ஜெட் சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை.

சென்னை மாவட்ட சிறு தொழில் கூட்டமைப்பு தலைவர் டி.வி.ஹரிஹரன்: கரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்களால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைய வில்லை.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக அகில இந்திய தலைவர் நரேந்திரகுமார் கோயங்கா: மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதிக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தை இயற்றும் திட்டம், வேலைவாய்ப்பை உருவாக்கவும், ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புத் (பியோ) தலைவர் ஏ.சக்திவேல்: நெருக்கடியான காலத்தில், இந்த பட் ஜெட் தொழில் துறையினருக்கு சிறப்பானதாக இருக்கும். அனைத் துத் துறைகளையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசரகால கடன் திட்டம் நீட்டிப்பு, கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவை வரவேற்கத்தக்கவை. மூலப் பொருட்கள்இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x