

கரூர்: மாணவர்கள் கோழி வளர்க்க ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவர்களிடையே செயல்படுத்த இருந்த நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் பாதியில் நின்றது.
கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், அரசு, அரசு உதவிபெறும், தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மேலாண்மை கல்லூரி நிர்வாகம், பள்ளி மாணவர்களுக்கு தங்கள் செல்வில் சேமிப்புக் கணக்கு தொடங்கி, சேமிப்பை ஊக்குவிக்க நாட் டுக்கோழி வளர்ப்பு போன்ற சுயதொழிலை தொடங்கி மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிளிலும் இத்திட்டத்தை அனுமதி வழங்க கோரியுள்ளது.
இதனை அடுத்து, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், பள்ளிக்கோ, மாணவர்களுக்கோ செலவு ஏற்படுத்தாத வகையில், பள்ளி மாணவர்கள் நலன், ஆசிரியர்கள் நலன் பாதிக்காத வகையில், இந்நிகழ்வில் எவ்வித புகாருக்கும் இடமின்றியும், இதுசார்ந்து ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் இவ்வாணை உடனே ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனை அடிப்படையில் நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது இத்திட்டம் நிறுத்திவைக்க உள்ளதாக மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டம் பற்றிய தகவலறிந்த ஆசிரியர்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து இத்திட்டத்தை நிறுத்தி வைக்க இன்று (பிப்.1ம் தேதி) உத்தரவிடப்பட்டுள்ளது.