

புதுக்கோட்டை: மருத்துவம் படிக்கும்போது போட்டி மனப்பான்மையை குறைத்துக்கொண்டு குழுவாக கலந்துரையாடுங்கள் என புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 34 பேருக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிக்க தேர்வாகி உள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தில் 2-ம் இடம் பிடித்துள்ள. இம்மாணவர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் 'நெகிழ்திறன் தன்னம்பிக்கை' பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். அப்போது, ''மாணவர்கள் ஒவ்வொருவரும் மருத்துவராக சாதிப்பதோடு மட்டுமல்லாது ஒரு நல்ல மனிதராக உங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். கிராமப்புறத்திலிருந்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்களை கையாளுதல் பற்றி மாவட்ட மனநல திட்டம் சார்பாக நடத்தப்படும் நெகிழ்திறன் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.
இதைத்தொடர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் பேசியது:
''தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களைவிட அதிக மதிப்பெண்களை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களால் பெற முடியும். புதிய சூழலில் கல்வி கற்கத் தொடங்குவதால் தொடக்கத்தில் சில சிரமம் இருக்கலாம். இது சகமாணவர்கள் அனைவருக்குமே இருக்கும். அடிப்படை ஆங்கிலத்தை மட்டும் கற்றுக்கொண்டால் போதுமானது. மாணவர்கள் தங்களது உடல் நலனில், மன நலனில் அக்கறை செலுத்த வேண்டும். முதலாமாண்டு முதலே காலை மற்றும் மாலை வேளையில் விளையாட்டு, உடற் பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடல் நலமுடன் இருந்தால்தான் கற்றல் நன்றாக இருக்கும்.
அத்துடன், தங்களது கலை சார்ந்த தனித் திறமைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும். போட்டி மனப்பான்மையை குறைத்துக்கொண்டு, குழுவாக கலந்துரையாட வேண்டும். பிரச்சினையைக் கண்டு முடங்கி விடாமல், அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவதுதான் நெகிழ்திறனாகும். அங்கு பயிலும் மாணவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நல்ல தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களெல்லாம் வாழ்க்கை பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் அறிய வேண்டும்.
பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களிடமும் தயக்கமின்றி சந்தேகங்களை கேட்கலாம். கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, எளிய முறையில் பாடம் நடத்துவதற்கு பேராசிரியர்கள் தயாராகவே இருக்கிறார்கள். இதற்கு முன்பு பள்ளி படிப்பின்போது எப்படி ஒரு பாடத்திட்டம் இருந்ததோ, அதைப் போன்றுதான் மருத்துவக் கல்விக்கென்று ஒரு பாடத்திட்டம் உள்ளது. இதை படித்தால் போதும்'' என்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.