

மதுரை: ‘கிரப்டோகரன்சி’ என்ற பெயரில், மதுரையில் ஓய்வு பெற்ற பொறியாளர் மனைவியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து மீது காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் கோமதி (50)
இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “எனது கணவர் பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஜவுளி வியாபாரியான அய்யர் பங்களாவைச் சேர்ந்த பாண்டித்துரை எங்களுக்கு 10 ஆண்டாக தெரியும். அவர் என்னிடம் கிரிப்டோகரன்சி என்ற நிறுவனத்தை பற்றி கூறினார். அதில் பணம் முதலீடு செய்தால் கிரிப்டோகரன்சி கொடுப்பர் என, அந்த நிறுவனத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் எனது முகவரி கொடுத்தார்.
கடந்த நவ 8-ஆம் தேதி கோவையைச் சேர்ந்த ரெஜினாகுமாரி என்பவருடன் ஆறுமுகம் எனது வீட்டுக்கு வந்தார். பிசினசில் முதலீடு செய்தால் கோடி கணக்கில் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை தெரிவித்தனர். இதில் உறுப்பினராக தலா ஒருவருக்கு ரூ. 4 ஆயிரம் செலுத்தவேண்டும் என, கூறி எனக்கும், கணவருக்கும் சேர்த்து ரூ.8 ஆயிரம் வாங்கினர்.
டிசம்பர் 12ம் தேதி பைபாஸ் ரோட்டி லுள்ள ஜெர்மானஸ் ஓட்டலில் கிரிப்டோகரன்சி நிறுவனத் தலைவர் வருவதாக கூறி, எனக்கு தெரிந்த நபர்களை அழைத்து வரச் சொன்னார்கள். மதுரையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உட்பட 15 நபர்களை அழைத்துச் சென்றேன். ஜி.கே.கோவிந்தசாமி, ஆனந்தி உட்பட 10 பேர் அங்கு இருந்தனர். அவர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து முதலீடு செய்தால் 3 மாதத்தில் கோடி ரூபாய் மற்றும் பிஎம்டபிள்யூ கார் வாங்கலாம் எனத் தெரிவித்தனர்.
முதலில் உறுப்பினரான என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் கிரிப்டோகரன்சி காயின்கள் தருவதாக ஆறுமுகம், ரெஜினா குமாரி கூறினர். இதையடுத்து அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டனர். என்னால் ரூ. 5 லட்சம் புரட்ட முடியாத சூழலில் ரூ. 3.75 லட்சத்துடன் கணவனும், நானும் கோல்டன் பார்க் ஓட்டலில் தங்கியிருந்த கோவிந்தசாமி, ஆறுமுகம், ரெஜினாகுமாரியை டிச.13-ல் சந்தித்து, அவர்களிடம் பணத்தை கொடுத்தோம்.
காயின் கேட்டபோது, நிறுவன தலைவர் கந்தசாமி யிடம் உள்ளதால் அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு 2 நாளில் வாங்கித்தருவதாக கூறினர். அவர்களின் வார்த்தையை நம்பினோம். காயின் தரவில்லை. பணத்தை திரும்பிக் கேட்டபோது, தரமுடியாது எங்கு வேண்டுமானாலும், புகார் கொடுங்கள் என்றும் ஊர், ஊராக இந்த வேலையைத் தான் செய்கிறோம் எனக் கூறினார்.
மதுரை ஜெர்மானஸ் ஓட்டலில் ஜன.26-ல் அறை எடுத்து ஏமாற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரிக்க, போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.