Published : 01 Feb 2022 07:38 AM
Last Updated : 01 Feb 2022 07:38 AM

தேர்தலையும் கரோனா தளர்வையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம்: சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தல் வருவதால்தான் நோய் தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. தளர்வுகள் அறிவித்த நிலையில் தேர்தலையும் கரோனா பரவலையும் தொடர்படுத்தி தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை வார்டுக்கு, முழு கவச உடையுடன் சென்று சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.மருத்துவமனை டீன் தேரணிராஜன்உடன் இருந்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா தொற்று 2-வது அலையில் அதிகஆக்ஸிஜன் தேவை இருந்தது.அந்த நிலை தற்போது இல்லை.2,500 படுக்கைகள் கொண்ட இந்தமருத்துவமனையில் 121 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 65 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். 16 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 40 பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள்.

ஜன. 15-ம் தேதி வரை கரோனாதொற்று சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது தொற்று குறைந்து வருகிறது. 26 மாவட்டங்களில் கணிசமாக தொற்று குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொற்று மிக அதிகமாகவும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய இடங்களில் சற்று அதிகமாகவும் உள்ளது.

தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் மொத்தமாகவே 1,018 பேர் மட்டுமேஅவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர், அதில் பெரும்பாலானோர் தடுப்பூசிசெலுத்தாதவர்கள். அதனால், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தளர்வுகள் அளித்த பின்னர், பொதுமக்கள் கூட்டமாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். சமூகவலைதளங்களில், தேர்தல் வருவதால்தான் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கருத்து பரவிவருகிறது. தேர்தலுக்கும் கரோனா பரவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பதிவிட வேண்டாம்.

தொற்று பரவல் பற்றி மத்திய,மாநில அரசுகள், உலக சுகாதாரநிறுவனம் தெளிவான கருத்துகளை தெரிவிக்கிறது. ஆன்லைன்முறையில் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய நிலையில்தான், வல்லுநர்கள் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள்திறக்கப்படுகின்றன. மாணவர்களின் பாதுகாப்பை மாவட்ட கல்விஅதிகாரிகள் கண்காணித்து வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x