Published : 01 Feb 2022 06:15 AM
Last Updated : 01 Feb 2022 06:15 AM
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புவரையிலான வகுப்புகள் மற்றும்கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இன்று (பிப்.1) முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அனைத்துமாணவர்களும் அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜன.3-ம் தேதி திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் பரவத் தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பொதுத்தேர்வு எழுதும் 10மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படலாம் என்று மாணவர்கள், பெற்றோர்மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1 முதல்12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரி, பாலிடெக்னிக் மா்ணவர்களுக்கு பிப்.1-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்குஒருசாரார் மத்தியில் வரவேற்பும் மற்றொரு சாராரிடையே அதிருப்தியும் எழுந்தது. கரோனா 3-வது அலைகாரணமாக கொஞ்சநாள் பொறுத்திருந்து பள்ளிகளைத் திறந்திருக்கலாம், அல்லது உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களை மட்டும் பள்ளிக்கு வரவழைத்திருக்கலாம் என்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல்நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. இதைத்தொடர்ந்து, அனைத்துபள்ளிகளிலும் கடந்த சில நாட்களாக முன் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. வகுப்பறைகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் இடம்விட்டுப் போடப்பட்டுள்ளன. மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக பள்ளிநுழைவுவாயிலில் கிருமிநாசினிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘மாணவர்கள் நலன் கருதி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்துவகை பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்.1 முதல் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிவழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத வருகையுடன் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்தலாம். மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட பின், மாணவர்கள் வராமல் இருந்தால் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
கல்லூரிகள், பாலிடெக்னிக் திறப்பு
அதேபோல், அனைத்து பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல்கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் இன்று திறக்கப்படுகின்றன. கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கினாலும் செமஸ்டர்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும், இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் நேரடித்தேர்வு நடத்தப்படும் என்றும் உயர்கல்வித் துறை ஏற் கெனவே தெரிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இதற்கிடையே, பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத் துறைவெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து சாப்பிடக் கூடாது. மூக்கு மற்றும் வாயைமூடியபடி முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி வளாகத்தின் நுழைவுவாயிலேயே உடல் வெப்ப பரிசோதனை செய்யவேண்டும்.
மாணவர்கள் அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்துகொள்ளவேண்டும். கரோனா அறிகுறிஉள்ள மாணவர்களுக்கு உடனடியாக தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
நோய்க்கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது. ஆசிரியர்களும், 18 வயதான மாணவர்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தட்டச்சு பயிலகங்கள்
மேலும், தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிலகங்களும் இன்று முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜி.லட்சுமி பிரியா, வணிகவியல் பயிலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘கடந்த 27-ம் தேதி அரசு அறிவித்தபடி, தொழில்பயிற்சிமற்றும் பயிற்சி நிலையங்கள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைபின்பற்றி பிப்.1 (இன்று)முதல்செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT