Published : 01 Feb 2022 08:26 AM
Last Updated : 01 Feb 2022 08:26 AM

கரூரில் திமுக கூட்டணி வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை: செந்தில்பாலாஜி கூட்டத்தில் ஜோதிமணி வாக்குவாதம்

கரூரில் நடைபெற்ற திமுக கூட்டணி வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின்போது அவமரியாதையாக நடத்தியதாக கூறி கூட்டத்தில் இருந்து ஆவேசமாக பேசியபடி வெளியேறும் ஜோதிமணி.

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிதலைமையில் நடைபெற்ற திமுககூட்டணி வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின்போது அவமரியாதையாக நடத்தியதாகக் கூறிஎம்பி ஜோதிமணி வெளியேறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ளகட்சிகளுக்கான வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை, மாநில மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் கட்சி தரப்பில் எம்பி ஜோதிமணி, மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, வார்டு ஒதுக்கீடு தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னசாமியிடம் மட்டுமே பேசியதாகவும், ஜோதிமணியை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோதிமணி கேள்விஎழுப்பியபோது, திமுக நிர்வாகி ஒருவர், ‘‘நீங்கள் பேசுவதென்றால் வெளியே சென்று பேசுங்கள்’’ எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி, ‘‘என்னை எப்படி வெளியே போகக் சொல்லலாம்? இவர்களுக்குத்தான் மரியாதை இல்லாமல் பேசத் தெரியுமா? நான் பேச எவ்வளவு நேரமாகும்? என்னை வெளியே போகசொல்வதற்கு நான் என்ன இவர்கள்வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்கிறேனா?’’ என ஆவேசமாக சத்தம் போட்டபடியே கூட்டத்திலிருந்து வெளியேறி புறப்பட்டுச் சென்றார்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது, ‘‘இந்த விஷயம் தொடர்பாக இப்போது பேச விரும்பவில்லை. இங்கு நடந்த ஒரு சம்பவத்தால் ஒட்டுமொத்தமாக தமிழகஅளவில் கூட்டணிக்குள் சங்கடங்கள் வந்துவிடக்கூடாது. இதுதொடர்பாக சில விஷயங்களைக் கூறினால், அது சமூக ஊடகங்கள்மூலம் வேறுவிதமாக சென்றுவிடும்’’ என்றார். இதுகுறித்து எம்பிஜோதிமணியின் கருத்தை அறிய,அவரை செல்போனில் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

ஜோதிமணிக்கு காங். கண்டனம்

இதற்கிடையே ஜோதிமணியின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினருமான பிரபாகர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோதிமணி தன்னிச்சையாக செயல்பட்டு நகராட்சித் தேர்தலில் தோல்வியை தேடித்தர முயற்சிக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x