Published : 01 Feb 2022 08:33 AM
Last Updated : 01 Feb 2022 08:33 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக, விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர்.
ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால், மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, ஆலோசகர்கள் மதுலிகா சர்மா, காத்யாயினி ஆனந்த்ஆகியோர் நேற்று தஞ்சாவூர்ரயில் நிலைய விருந்தினர் இல்லத்தில் விசாரணையை தொடங்கினர்.
அப்போது, மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா, வல்லம் டிஎஸ்பிஆர்.பிருந்தா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஹேமா அகிலாண்டேஸ்வரி, ஜீவானந்தம், அஞ்சை, பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உதயபானு, அருள்மதிகண்ணன், மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் திலகவதி, மாணவியை வீடியோ எடுத்த முத்துவேல், மைக்கேல்பட்டி கிராமமக்கள், முன்னாள் பள்ளி மாணவிகள், தற்போது அதே பள்ளியில் படித்து வரும் மாணவிகள், மாணவியின் தாய் வழி தாத்தா - பாட்டி, சமூக ஆர்வலர்கள் உட்பட 20-க்கும்மேற்பட்டோர் ஆஜராகி, தங்களது கருத்துகளை ஆணையத்திடம் தெரிவித்தனர்.
ஆணையம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்கப்படும் கேள்விகளையும், பதில்களையும் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா பதிவு செய்தார். பின்னர், ஆணையத்தினர் மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்குச் சென்றனர். அங்குபள்ளியின் அங்கீகார ஆவணங்கள், காப்பகத்தின் ஆவணங்களையும் சரிபார்த்தனர். பின்னர், பள்ளிஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவிகள், காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்பு, மாணவியின் ஊரான அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் சென்று, மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பிரியங்கா கனூங்கோ பேசியதாவது: தற்கொலை செய்து கொண்ட மாணவி தங்கியிருந்த இடம் சிறார்நீதி சட்டத்தின்கீழ் குழந்தைகள் இல்லம் என பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பதிவின் காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. தற்போது மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT