

மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் நடந்து வந்த விசாரணையின்போது மாணவியின் தந்தை முருகானந்தம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாச்சலபதி வாதிட்ட விவரம்:
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மதமாற்றப் புகாரிலிருந்து பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்றும் வகையில் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துஉள்ளார். பள்ளிக்கல்வித் துறையும் துறைரீதியான விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என அறிக்கை அளித்துள்ளது.
எதிர்க் கருத்துகளைப் பரப்புவதற்காக வழக்கு தொடர்பான ரகசிய ஆவணங்களைக் காவல்துறையினர் கசியவிடுகின்றனர். மாணவி தற்கொலை வழக்கில் தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இதனால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் டி.செந்தில்குமார் வாதிடுகையில், மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சிறுமியிடம் நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்ற அதே நாளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விடுதி வார்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் சில சமூகவிரோதிகள் பள்ளித் தாளாளரை தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர்.
அந்த வீடியோவை காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மதவாத அமைப்புகள் புகுந்ததால் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி)பத்திரிகையாளர்களைச் சந்தித்துவழக்கு தொடர்பான தகவல்களைத் தெரிவித்தார். அப்போது அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவே தெரிவித்தார்.
மாணவியை வீடியோ எடுத்த முத்துவேல் விசாரணைக்கு இணங்க மறுக்கிறார். மனுதாரரும், சில மதவாத அமைப்புகளும் பள்ளி நிர்வாகத்தின் மீது கட்டாய மதமாற்றக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளன. அது குறித்துபள்ளி மாணவிகளிடம் விசாரிக்கப்பட்டபோது அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை என்றனர். உள்ளூர் மக்களும் அவ்வாறே தெரிவித்தனர். விசாரணை சரியான திசையில் செல்கிறது. இதனால் விசாரணையை வேறுஅமைப்புக்கு மாற்ற வேண்டியதில்லை என்றார்.
மனுதாரரின் வழக்கறிஞர் யார்?
இந்த வழக்கில் மனுதாரர் முருகானந்தம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.கார்த்திகேய வெங்கடாச்சலபதி. மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர். இந்து முன்னணி வழக்கறிஞர் அணியின் மாநில பொதுச் செயலராகவும், உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு வழக்கறிஞராகவும் உள்ளார். மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் வழக்குகளில் அவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட காட்சிகளை சுட்டிக்காட்டிய நீதிபதி
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணமாக கூறப்பட்டதால் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய நீதிபதி, மதமாற்றத்தின் தாக்கம் தொடர்பாக இரு திரைப்படக் காட்சிகளை, குறிப்பாக இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘கல்யாண அகதிகள்’ படத்தில் வரும் வசனக் காட்சிகளைச் சுட்டிக்காட்டினார்.
ஜாமீன் மனு மீது முடிவெடுக்க உத்தரவு
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகாயமேரி ஜன.18 முதல் சிறையில் உள்ளார். அவர் நீண்டநாட்கள் சிறையில் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை. அவர் தவறு செய்தாரா? அப்பாவியா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும். எனவே, சகாயமேரியின் ஜாமீன் மனு மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு, கைவசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.