Published : 01 Feb 2022 01:30 PM
Last Updated : 01 Feb 2022 01:30 PM

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் புலி நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

பொள்ளாச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் கவர்க்கல் என்னும் இடத்தில் சுமார் 6 வயதுடைய புலி கம்பீரமாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அவ்வழியாக வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

கோடை காலங்களில் தண்ணீர் தேடி வால்பாறை சாலையில் யானைகள் நடமாடுவது வழக்கம். தற்போது முதன்முறையாக புலி தென்பட்டுள்ளது. இதை வனத்துறையினரும் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘கவர்க்கல் பகுதியில் புலி சாலையை கடந்து சென்றதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது, உணவு உண்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆழியாறு சோதனைச் சாவடி முதல் வால்பாறை வரை சாலையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x