

கோவை: கரோனா பரவல் அச்சம் காரணமாக, சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு, அஞ்சல் வாக்கு செலுத்தும் வசதி செய்து தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 21.55 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், கரோனா பரவல் அச்சம் காரணமாக, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தபடியே, அஞ்சல் மூலம் வாக்குகளை செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் சுமார் 64 ஆயிரம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 15 ஆயிரம் பேரும் அஞ்சல் மூலம் வாக்களித்தனர். வீடு வீடாகச் சென்று இவர்களுக்கு அஞ்சல் வாக்குக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளில் வாக்குச்சாவடியில் உள்ளது போன்று மறைவிடம் ஏற்படுத்தப்பட்டு, அஞ்சல் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது, கரோனா 3-வது அலையின் தாக்கம் உள்ளது. மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,‘‘மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து அஞ்சல் வாக்குகள் செலுத்த அனுமதிப்பது தொடர்பாக இதுவரை எவ்வித உத்தரவும் வரவில்லை. கரோனா 2-வது அலையின்போது நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தது. ஆனால், தற்போது கரோனா தொற்று பரவல் இருந்தாலும் அதன் பாதிப்பு தீவிரமாக இல்லை. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்றனர்.