

தேர்தலில் அதிமுகவுக்கும், பாமக வுக்கும்தான் போட்டி நிலவுகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்களுடன் சென்னை வடபழனியில் உள்ள விஜய்பார்க் ஹோட்டலில் நேற்று கலந்துரை யாடினார். மருத்துவத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தான் ஆட்சிக்கு வந்தால் மருத்துவத் துறைக்கு எந்த மாதிரியான திட்டங்களை செயல் படுத்துவேன் என்பது குறித்து விவரித்தார்.
இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தை 50 ஆண்டுகளாக சினிமா துறையைச் சார்ந்தவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். அதனால் மாற்றம் வேண்டும். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கிராம சுகாதார திட்டம் மற்றும் 108 ஆம்பூலன்ஸ் திட்டம் கொண்டுவந்தேன். அது மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
பாமக ஆட்சிக்கு வந்தால் கிராமங்களில் மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ரூ.20,000 நிதி கொடுக்கப்படும். வெளிநாட் டினர் தமிழகம் வந்து மருத்துவம் பார்க்கும் அளவுக்கு வசதிகளை செய்வேன். மாவட்டம் முழுவதும் உயர் மருத்துவ சிகிச்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், “ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் பிரச்சாரம் செய்தால் உயிர் பலியை தவிர்க்க லாம். பாமகவின் வரைவு அறிக் கையை காப்பி செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு அதுதான் கதாநாயகன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. திமுகவுக்கும், பாமகவுக்கும் போட்டியில்லை. திமுகவுக்கு கட்சிக் குள்ளேதான் போட்டி நடக்கிறது. தேர்தலில் அதிமுகவுக்கும், பாமக வுக்கும் தான் போட்டி நிலவுகிறது” என்றார்.