Published : 01 Feb 2022 01:33 PM
Last Updated : 01 Feb 2022 01:33 PM

பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? - நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையிலுள்ள பைக்காரா அணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரை கொண்டு, மின் உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில்,அந்த அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்துக்கு வந்து செல்கின்றனர்.

தண்ணீரை கிழித்துக்கொண்டு அதிவேகமாக செல்லும் ‘ஸ்பீடு’ படகில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், அங்கு மோட்டார் படகுகளும் இயக்கப்படுகின்றன. உதகை- கூடலூர் பிரதான சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லவேண்டும். இந்த சாலையில் பயணிக்க வனத்துறை சார்பில் ஜீப், கார்களுக்கு ரூ.20, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, வேன்களுக்கு ரூ.30 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை, கடந்தபல மாதங்களாக மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் உள்ளது. இதனால் அந்த வழியாக சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தடுமாறிச் செல்கின்றன.

இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து தினமும் பைக்காரா படகு இல்லத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சாலை பழுதடைந்து காணப்படுவதால் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது. பழுது ஏற்பட்டால், அதனை சரிசெய்ய அங்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை. தொடர்புடைய அதிகாரிகள் சாலையை முழுமையாக சீரமைக்காமல், குழிகளில் மண்ணை கொட்டியுள்ளனர். காற்றில் புழுதி பறந்து, வாகன ஓட்டுநர்களின் கண்களில் விழ வாய்ப்புள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

சில சுற்றுலா பயணிகள் கூடலூர் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு பைக்காரா படகு இல்லத்துக்கு நடந்து செல்கின்றனர். சாலைகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிப்பதோடு விபத்து அபாயமும் உள்ளது. பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மிகவும் பழுதடைந்த சாலையை சீரமைக்க தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x