

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (37). தனியார் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு கவின் காந்தி, மிலன் காந்தி என 2 மகன்கள் உள்ளனர். பிரபுவிற்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்த பிரபுவை, அவரது தாயார் கூலி வேலை செய்து அரசுப்பள்ளியில் படிக்க வைத்தார். ஏழ்மை காரணமாகவும், 2000-ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், இவரால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நீட்தேர்வு மூலம் மருத்துவம் படிக்க திட்டமிட்ட பிரபு, அதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு நேற்று கலந்தாய்வு நடந்தது. அதில் அவருக்கு பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதனையறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.