

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளில் செயற்கை வண்ணம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு சந்தையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 20-க்கும் மேற்பட்ட கடைகளில் செயற்கை வண்ணம் கலந்த காய்கறிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், 7 கடைகளில் பச்சை நிற செயற்கை வண்ணம் கலந்த பச்சை பட்டாணி மற்றும் ரோஸ் நிற செயற்கை வண்ணம் கலந்த டபுள் பீன்ஸ் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, செயற்கை வண்ணம் கலந்த சுமார் 400 கிலோ பச்சை பட்டாணி மற்றும் டபுள் பீன்ஸ் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும் காய்கறி மற்றும் பழங்களில் செயற்கை வண்ணம் பூசப்பட்டு கோயம்பேட்டில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதை சாப்பிட்டால் வயிற்று போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
இதுபோன்று உணவு பொருட்களில் ரசாயனம், செயற்கை வண்ணங்கள் கலந்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் அழிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.