Published : 01 Feb 2022 07:56 AM
Last Updated : 01 Feb 2022 07:56 AM
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் 27,812 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்காக நேற்று நடைபெற்ற முதல்கட்ட பயிற்சி வகுப்பில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த 27,812 அலுவலர்கள் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி மாநகரம் முழுவதும் உள்ள 24 மையங்களில் நேற்று நடைபெற்றது.
தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி மற்றும் திருவி.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாநகராட்சி ஆணையர் (மாவட்ட தேர்தல் அலுவலர்) ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து இப்பயிற்சி வகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களையும் பார்வையிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாம்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டி.சினேகா, எம்.சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT