Published : 01 Feb 2022 07:49 AM
Last Updated : 01 Feb 2022 07:49 AM
சென்னை: தை அமாவாசையையொட்டி கோயில் குளக்கரைகளில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தமிழகம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று தை அமாவாசை என்பதால் வடபழனி முருகன் கோயில் குளத்துக்கு அருகே முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலை முதலே ஏராளமானோர் வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பின்னர், வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்துச் சென்றனர்.
இதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்க நேற்று ஏராளமானோர் வந்திருந்தனர். ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்துச் சென்றனர். சென்னையில் நேற்று வரை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால், பெரும்பாலானவர்கள் கோயில் குளக்கரைகளில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால், கோயில் குளக்கரைகளில் தர்ப்பணம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. கரோனா வழிகாட்டுதல் வழிமுறைகளின் அடிப்படையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தர்ப்பணம் கொடுத்துச் செல்லும்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT