

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புராதன மயில் சிலை மாயமான விவகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழு தங்களது விசாரணையை 6 வார காலத்துக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பிறகு அங்குள்ள புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த புராதன மிக்க மயில் சிலை மாயமாகி வேறு ஒரு மயில் சிலை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸாரின் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிடக்கோரியும், அதுபோல அறநிலையத் துறை அதிகாரிகளின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தக்கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது உண்மை கண்டறியும் குழுவின் நிலவரம் என்ன என்பது குறித்து ஆஜராகி விளக்கமளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். அவரிடம் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணை நிலை என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்ததால் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையை நிறுத்தி வைத்திருந்ததாக தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், மாயமான சிலையை மீட்டு அங்கு வைக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த சிலையை மீட்கமுடியாவிட்டால் ஆகமவிதிகளின்படி, அதே வடிவத்துடன் கூடிய வேறு ஒரு சிலையை அங்கு வைப்பது தொடர்பாக தொல்லியல் துறையினருடன் ஆலோசித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் 2 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் தங்களது விசாரணையை ஆறு வார காலத்துக்குள் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழுவும் தனது விசாரணையை 6 வார காலத்துக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.