Published : 01 Feb 2022 08:21 AM
Last Updated : 01 Feb 2022 08:21 AM
ஆவடி: ஆவடி அருகே மயான வசதியில்லாததால் பெண்ணின் உடலைப் புதைக்க முடியாமல் 30 மணி நேரம் தவித்த பொதுமக்களுக்கு, அதிகாரிகள் 3 மணி நேரத்தில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஆர்ச் அந்தோணி நகர். இப்பகுதியில் கடந்த25 ஆண்டுகளாக இடுகாடு வசதி இல்லாததால், இறந்தவர்களின் சடலங்கள் அங்குள்ள ஏரிக்கரையின் ஒரத்தில் புதைக்கப்பட்டு வந்தன.
சமீபத்தில் பெய்த மழையால் அந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இச்சூழலில், ஆர்ச் அந்தோணி நகரைச் சேர்ந்த பேபிகுமாரி(68) என்ற பெண் கடந்த 29-ம் தேதி காலை இறந்தார்.
மயான வசதியில்லாததால், பெண்ணின் உடலைப் புதைக்கமுடியாமல், அவரது உறவினர்களும், பொதுமக்களும் அவதியுற்றனர். ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் உடலைப் புதைக்க முடியாமல்30 மணி நேரம் காக்க வைக்கப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸுக்கு பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின்படி, நேற்று முன்தினம் ஆவடி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து, ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நில அளவையரை வரவழைத்து, மயானப் பிரச்சினைக்குநிரந்தரத் தீர்வு காணும் விதமாக ஏரிக்கு அருகாமையில், மயானத்துக்கு இடம் ஒதுக்கி அளந்து கல் நட்டுக் கொடுக்கப்பட்டது. பிறகு, அங்கு பேபிகுமாரியின் உடல் புதைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு 3 மணி நேரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்திய அதிகாரிகளை மக்கள் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT