

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி 1.10.1919- அன்று உருவானது. பின்னர் 1.10.1953 அன்று 2-ம் நிலை நகராட்சியாகவும், 01.04.1973 அன்று முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் தேர்வுநிலை நகராட்சியாக 2.3.1988 அன்று தரம் உயர்த்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
33.13 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. 1922-ம் ஆண்டு முதல் தேர்தலை விழுப்புரம் நகராட்சி சந்தித்தது. இதுவரை 19 தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது 20-வது தேர்தலை விழுப்புரம் நகராட்சி சந்திக்க உள்ளது.
இந்த நகராட்சியை திமுக, அதிமுக என மாறி, மாறி கைப்பற்றினாலும் நகராட்சி தலைவர் பதவியை ஆண்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில், 100 ஆண்டுகள் கடந்த பின்முதன் முதலாக தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நகரமன்றதலைவர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் நகர் மன்ற உறுப்பினர்கள், தங்களில் பெண் உறுப்பினர் ஒருவரை தலைவராக தேர்வு செய்வார்கள்.
அவர் நகர்மன்ற தலைவராக பதவியேற்பார். விழுப்புரம் நகராட்சியில் வார்டு எண் 25, 34, 42 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுப்பிரிவுக்கும், 13,19,32 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 3,4,6,7,8,9,10, 11,15,16,17,18,20,21,26,30,33,40ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும்,1,2,5,12, 14,22,23,24,27,28,29,31,35,36, 37,38,39,41 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரில் கட்சி வித்தியாசமின்றி அனைவரிடம் செல்வாக்கு பெற்ற ஆளுங்ககட்சியைசேர்ந்த ஒருவர், தான் சார்ந்த கட்சியின் மாவட்ட தலைமையிடம் தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். திகைத்து போன அக்கட்சியின் மாவட்ட நிர்வாகம் வேறு வழியின்றி கட்சியின் மற்றொரு நிர்வாகி குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை நகர்மன்ற தலைவர் வேட்பாளராக தேர்வு செய்து ரகசியமாக வைத்துள்ளது.
இதையறிந்த மற்றொரு கட்சியின் மாவட்டத்தலைமை தன் கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்த படித்த, நிர்வாக திறமையுடைய பெண்கள் சிலருக்கு வாய்ப்பு அளித்து களத்திற்கு அனுப்ப ஆயத்தமாகி வருகிறது. வருகின்ற 4-ம் தேதி வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். நாளை ( புதன்கிழமை) வளர்பிறை நாள் என்பதால் இரு பிரதான கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.