

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்னம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் மொத்தம் 41 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச்சாவடிகள் தனியார் வசம் உள்ளன. மீதமுள்ள 12 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் உள்ளன. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரத்து 500 கோடி வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் சுங்கவரியை உயர்த்துகின்றனர். இதனால், 4 லட்சம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு சுங்கவரி வசூலிக்கின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து சென் னைக்கு ஒரு லோடு மணல் எடுத்து வர ஒரு லாரிக்கு சுங்க கட்டணமாக ரூ.1,950 வசூலிக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு சுங்கக் கட்டணம் மட்டுமே ரூ.58,500 செலுத்துகிறோம். அரியலூரில் இருந்து சென்னைக்கு ஒரு லோடு மணல் எடுத்து வந்தால் லாரிக்கு ரூ.2,900 சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே ஒரு மாதத்துக்கு ரூ.87,000 செலுத்துகிறோம். இதேபோல், பல்வேறு இடங்களுக்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வண்டலூரில் இருந்து செங்குன் றம் செல்லும் வழியில் 40 கி.மீ தூரத்துக்கு 3 இடங்களில் (போரூர், அம்பத்தூர், செங்குன்றம்) சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி அருகேவுள்ள சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், அக்கரை, போரூர், அம்பத்தூர், செங்குன்றம் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.
கேரளாவில் சுங்கவரிக் கட்டணத்தை மாநில அரசே வசூல் செய்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை தமிழக அரசே ஏற்று நடத்திட முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது சுங்கக் கட்டணத்தில் 50 சதவீதம் குறைத்து வசூலிக்க வேண்டும்.