

வெளியூர்களில் வசித்துவரும் வாக்காளர்கள் சொந்த ஊருக்கு வந்து, தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுக, திமுகவினர் செல்போன் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஊருக்கு வந்துசெல்வதற்கான பயணச் செலவைத் தருவதாகவும் கட்சிகள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி, பாமக, நாம் தமிழர் கட்சி, பாஜக என பலமுனைப் போட்டி நிலவுகிறது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில், வெற்றி பெறக்கூடியவர்களின் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக விளங்குவதால், அதனைப் பெற அனைத்து கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், திருச்சி கிழக்கு, மேற்கு, ரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளிலுள்ள வீடுகளில் மொத்த வாக்காளர்கள், அவர்களில் பணி மற்றும் கல்வி நிமித்தமாக வெளியூர்களில் வசிப்போரின் எண்ணிக்கை, அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை அதிமுக, திமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். அத்துடன், வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்களை செல்போனில் தொடர்புகொண்டு மே 16-ம் தேதி வந்து தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறும், சொந்த ஊருக்கு வந்து செல்வதற்கான பயணச் செலவை ஏற்றுக்கொள்வதாகவும் கட்சியினர் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, அதிமுகவினரிடம் கேட்டபோது, “வெளியூரில் உள்ளவர்களின் வாக்குகளைக் குறிவைத்து செல்போனில் பேசி வேண்டுகோள் விடுத்து வருகிறோம். ஒரு சிலர், பயணச் செலவுக்கு சிரமமாக இருப்பதாக எங்களிடம் கூறினர். அதைப் பார்த்துக் கொள்ள லாம் எனக் கூறினோம். மற்றபடி யாருக்கும் பணமோ, பொருளோ கொடுப்பதாக எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை” என்றனர்.
திமுக பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் கேட்டபோது, “வெளியூரில் உள்ள வாக்காளர்கள், பயணச் செலவைக் கொடுத்தால் வருவதாக சிலர் வெளிப்படையாகவே கேட்கின்றனர். இதை ஒத்துக்கொண்டால், தேர்தல் விதிமீறல் என புகார் செய்துவிடுவர். பயணச் செலவை தர முடியாது எனக்கூறினால், ஒரு வாக்கை இழக்க வேண்டியதாகிவிடும். எனவே, மழுப்பலாகப் பேசி சமாளித்து வருகிறோம். நாங்கள் இதுவரை யாருக்கும் பணம் தருவதாகக் கூறவில்லை” என்றனர்.
அதிமுக, திமுக நிர்வாகிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தபோதிலும், வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுக்கான பயணச் செலவை அளிப்பதாகக் கூறி, இரு கட்சியினரும் அழைப்பு விடுப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.