

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மருத்துவ, வாகன வசதி செய்து தருமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கலை ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்திலேயே மருத்துவ வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு தாமதமின்றி செல்வதற்கேற்ப நியமன ஆணையை முன்கூட்டியே வழங்க வேண்டும். வெகு தொலைவில் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தேர்தல் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது ஆசிரியை ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார். இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, தேர்தல் பணியில் ஈடுபடுவோர் வீடு திரும்ப வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிறப்பு ஆசிரியர்களுக்கு
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களில் பெண் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பு தெரிவிப்பவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.