Published : 18 Apr 2016 09:13 PM
Last Updated : 18 Apr 2016 09:13 PM

தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளது என்பது திமுக-வின் பொய்ப்பிரச்சாரம்: ஜெயலலிதா காட்டம்

காஞ்சிப்புரத்தில் திங்கள் மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார். அப்போது திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

ஜெயலலிதா பேசியதாவது:

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும், மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டேன். நீங்களும் என்னுடைய வேண்டுகோளினை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தினீர்கள். உங்களின் அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். மாற்றம் தந்த உங்கள் வாழ்வில் ஏற்றம் தந்த அரசு தான் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தேர்தலின் போது உங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளித்தேனோ, என்னென்ன திட்டங்களை தருவேன் என்று சொன்னேனோ, அதையெல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சொன்னதை செய்திருக்கிறேன். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதன் பயனை நீங்கள் எல்லாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் வரை ஒரு குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஐந்தாண்டுகளில் 3,256 கோடி ரூபாய் செலவில் 14.3 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் 5,879 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,79,954 பேர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 20,046 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இருண்ட தமிழகம் ஒளி பெற வழிவகை செய்யப்படும் என்று நான் வாக்குறுதி அளித்து இருந்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து திட்டங்களின் மூலம் 7,485.5 மெகாவாட் மின்சாரம் தமிழக மின் தொகுப்பில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி சென்ற தேர்தலின் போது என்னால் அளிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பயனாளிக்கு 4 ஆடுகள் வீதம் 7 லட்சம் பயனாளிகளுக்கு 927.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதே போன்று, 60,000 விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். அந்தத் திட்டமும் நிறைவேற்றப்பட்டு விட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் 231.11 கோடி ரூபாய் செலவில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்படும் 45 நாட்களுக்கு, மீனவக் குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத மீனவக் குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தாய்மார்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்கிணங்க, அணையின் நீர்மட்டம் 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அணை வலுப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.



கேபிள் டி.வி. தொழில் அரசுடைமையாக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி. இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு அனைத்து மக்களுக்கும் மாதம் 70 ரூபாய் என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.



ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டங்களின் கீழ் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என்றும்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின்



கீழ் 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்களுக்கு 2,537 கோடியே 74 லட்சம் ரூபாய் நிதியுதவியும், 2,844 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.



முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது. இவையெல்லாம் நான் செய்வேன் என்று சொன்ன வாக்குறுதிகள். நான் சொன்னதைச் செய்தேன். இது மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை சொன்னதை செய்வேன், செய்வதைத் தான் சொல்வேன் என்று சொல்லி வந்தேன். ஆனால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் சொல்லாத பவற்றையும் நான் செய்திருக்கிறேன். மக்களை நாடி அரசு என்பதற்கேற்ப அம்மா திட்டம் இன்று மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



ஏழை மக்கள் மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 530 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதே போன்று, அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குழந்தைகள் பரிசுப் பெட்டகம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்யும் அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.



இந்த சாதனைகளையெல்லாம் கண்டு பொறுக்க முடியாத திமுக தலைவர் திரு. கருணாநிதியும், திமுக-வினரும் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நம்முடைய சாதனைகளையெல்லாம் கண்டு மக்கள் பாராட்டுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் திரு. கருணாநிதியும், திமுக-வினரும் வேண்டுமென்றே 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.



தமிழ் நாட்டில் மின்வெட்டு உள்ளது என்று திமுக-வினர் செய்யும் பிரச்சாரம் பொய் பிரச்சாரம் என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த பொய்யையும் துணிந்து சொல்லலாம் என்று திமுக-வினர் நினைக்கிறார்கள். வாய்க்கு வந்ததைச் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என திமுக-வினர் நினைக்கின்றனர். மின் வெட்டே இல்லாத போது மின் வெட்டு இருக்கிறது என்று பிரச்சாரம் செய்வது எப்படிப்பட்ட கேலிக் கூத்து? வீடுகளுக்கு மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளிலும் கூட எந்தவித மின் வெட்டும் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் 4 வருடத்திற்குள் மும்முனை இணைப்பு வழங்கி மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழி காணப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்று திமுக-வினர் கேட்கிறார்கள்; திரு. கருணாநிதியும் கேட்கிறார். அதற்கு என்னுடைய பதில், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.



அதைப் போலவே, மின் திருட்டை தடுக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் குழுக்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்களே, அது என்னவாயிற்று என்று திமுக-வினர் கேள்வி எழுப்புகிறார்கள்; திரு. கருணாநிதி கேள்வி எழுப்புகிறார். அதற்கு என்னுடைய பதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 64,428 மின் திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, திருட்டில் ஈடுபட்டோர் இடமிருந்து 117 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.



திரு. கருணாநிதியின் குடும்பத் தொலைக் காட்சியிலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட் இடம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும்; ஏழை, எளியோருக்கு 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்று சிறு விளம்பரக் காட்சி மூலம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மை என்னவென்றால், கடந்த 5 ஆண்டுகளில் 11 லட்சத்து 49 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.



திமுக தனது 2006-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாக திரு. கருணாநிதியும், திமுக-வினரும் பொய் சொல்லி வருகின்றனர். அதில் நிறைவேற்றப்படாமல் உள்ள பல திட்டங்களில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.



நான் கேட்கிறேன், 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம் என தி.மு.க. வாக்குறுதி அளித்ததா? இல்லையா? ஆட்சிக்கு வந்த பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ‘கையகல’ நிலம் வழங்குவோம் என்று தெரிவித்து அதையும் செய்யவில்லையே?



ஆற்றுப் படுகையில் 200 மீட்டர் தூரத்திற்கு மேல் தான் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அது 100 மீட்டர் தூரம் என குறைக்கப்படும் என்ற வாக்குறுதி



நிறைவேற்றப்பட்டதா? நிறைவேற்றப்பட்டு இருந்தால் அதே வாக்குறுதி ஏன் இப்போதைய திமுக தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது?



வேளாண்மைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தேசிய உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் தமிழகத்தில் நிறுவப்படும் என்று 2006 திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? அப்படியெனில், அதே வாக்குறுதி ஏன் தற்போதும் 2016 தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது?



புன்செய் நிலங்களையும், தரிசு நிலங்களையும் முறையான விளைச்சல் நிலங்களாக மாற்றிட நுண்ணிய நீர் பிரி முகடு மேலாண்மை போன்ற புதிய தொழில்நுட்பங்கள் கையாள்வதற்கு வழிவகை காண்போம் என்ற வாக்குறுதி 2006-ல் திமுக-வால் கொடுக்கப்பட்டதே? அது நிறைவேற்றப்பட்டதா? அப்படியெனில், ஏன் அதே வாக்குறுதி தற்போதும் கொடுக்கப்பட்டுள்ளது?



முல்லைப் பெரியாறு அணையில் 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்றும், அது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த ஆவன செய்வோம் என்றும், 2006 தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதே? அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்லாமல் இதற்கு நேர்மாறாக மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துணிந்தவர் திரு. கருணாநிதி.



தற்போது, திமுக-வின் தேர்தல் அறிக்கையில், முல்லைப் பெரியாறு நீர்மட்ட அளவினை 142 அடியாக உயர்த்திட உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை முழுமையாக செயல்படுத்திடுமாறு மத்திய அரசை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதே!



இதில் தொடர்ந்து வலியுறுத்த என்ன இருக்கிறது? கடந்த 2 ஆண்டுகளாக 142 அடி தண்ணீர் தேக்கப்படுகிறதே! 142 அடி அளவு தண்ணீர் தேக்கினால் போதும் என கூறி தமிழக மக்களுக்கு திமுக தொடர்ந்து துரோகம் இழைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அணையின் முழு கொள்ளளவான 152 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். தேவையான மராமத்து பணிகளை முடித்து, 152 அடி வரை நீரை தேக்கலாம் என்று தான் உச்ச நீதிமன்ற ஆணை கூறுகிறது.



இதற்கெல்லாம் முதலில் திரு. கருணாநிதி பதில் சொல்லட்டும். அதன் பிறகு 2006-ஆம் ஆண்டு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், இன்னும் என்னவெல்லாம் நிறைவேற்றவில்லை என நான் தெரிவிக்கிறேன்.



திரு. கருணாநிதி குழப்பத்தில் இருக்கிறார் என்று தான் தெரிகிறது. 2006-ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தார்களோ, அதே வாக்குறுதிகளை மீண்டும் இப்போது 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் மீண்டும் சொல்லி இருக்கிறார்கள். 152 அடி வரை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்ற ஆணையே கூறும் போது, 142 அடி வரை தேக்கலாம் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அர்த்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.



வாக்காளப் பெருமக்களே! முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவங்களை சற்று சிந்தித்து பார்த்தால், யார் தமிழக மக்களுக்காக உழைக்கிறார்கள், யார் “தன்” மக்களுக்காக உழைக்கிறார்கள் என்பது நன்றாகப் புரியும்.



தி.மு.க. குடும்பச் சண்டை காரணமாக மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு அப்பாவி ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தார்களே? வீடியோ ஆதாரங்கள் இருந்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டது தான் மிச்சம். யார் பயன் பெறுவதற்காக இந்த நடவடிக்கை? “தன்” மக்களுக்காகத் தானே இந்த நடவடிக்கை?



தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், அந்த கொலை வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இதற்கு காரணம் என்ன? "தன்" மக்கள் நலம் தானே?.



முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் துவங்கப்பட்டது எதற்காக? திமுக தலைவரின் குடும்பச் சண்டை காரணமாகத் தானே?



கேபிள் டிவி நிறுவனம் பின்னர் முடக்கப்பட்டதற்கு என்ன காரணம்? குடும்ப சண்டை தீர்ந்தது தானே காரணம்? இதற்கும் "தன்" மக்கள் நலம் தானே காரணம்.



இந்த சுய நலம் காரணமாகத் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க வேண்டும் என தி.மு.க. நினைக்கிறது. எனவே தான் கேபிள் டி.வி. இணைப்பு பற்றி எந்த அறிவிப்பும் திமுக-வின் தேர்தல் அறிக்கையில் இல்லை.



இப்படி, "தன்" மக்கள் நலனுக்காக திரு. கருணாநிதி செய்த பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக மக்களுக்காக திரு. கருணாநிதி செய்த பணிகள் இல்லவே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். இருக்கின்றன.



இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் தி.மு.க.



கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டு மீனவர் சிறை பிடிப்புக்கு காரணம் தி.மு.க.



காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடத் தவறியது தி.மு.க.



சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை புகுத்த உதவியது தி.மு.க.



முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தடுமாற்றத்துடன் நடந்து கொண்டது திமுக.



ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தாமதப்படுத்தியது தி.மு.க.



நில அபகரிப்புக்கு துணை போனது தி.மு.க.

திரைப்படத் துறையையே கபளீகரம் செய்தது தி.மு.க.

தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது தி.மு.க., என அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாங்கள் செய்த சாதனைகளையும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் நீங்கள் அனுபவித்த வேதனைகளையும் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது, உங்கள் அன்புச் சகோதரி ஆட்சியில் சாதனை மேல் சாதனை நடக்கிறது. அன்றைக்கு, திரு. கருணாநிதி ஆட்சியில் வேதனை மேல் வேதனை தான் உங்களுக்கு கிடைத்தது.

இவ்வாறு பேசினார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x