Published : 31 Jan 2022 11:54 AM
Last Updated : 31 Jan 2022 11:54 AM

கோட்சே பெயரைச் சொல்லக்கூடாது என கோவை காவல் அதிகாரி ஏன் தடுத்தார்? - திருமாவளவன் கேள்வி

திருமாவளவன் | கோப்புப் படம்.

கோவை: காந்தியைக் கொன்றது கோட்சே என்றும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இந்து மதவெறியர்கள் என்றும் கூறக் கூடாதென கோவையைச் சார்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும், வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்குவாதம் செய்த நிகழ்வு அதிர்ச்சியையும் அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "காந்தி நினைவுநாளையொட்டி கோவையில் 'மக்கள் ஒற்றுமை மேடை' என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.இராமகிருஷ்ணன் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர். காந்தியைக் கொன்றது கோட்சே என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இந்து மதவெறியர்கள் என்றும் கூறக் கூடாதென அப்பகுதியைச் சார்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும் வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

காவல் துறையினர் அவ்வாறு நடந்துகொண்டது ஏனென்று விளங்கவில்லை. காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி பயங்கரவாதி நாதுராம் கோட்சே தான் என்பதும், அவன் அதற்காக மரணத் தண்டணைக்குள்ளானான் என்பதும் வரலாற்று உண்மை. இந்த வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி? ஏன் கோட்சே பெயரைச் சொல்லக்கூடாது என தடுத்தார்? காந்தியடிகளைக் கோட்சே கொல்லவில்லை என்று நம்புகிறாரா? அல்லது காந்தியடிகள் கொல்லப்படவே இல்லை; வேறு காரணங்களால் இறந்தார் என கருதுகிறாரா? அல்லது அவர் காந்தியைக் கொன்றது சரி என்று கோட்சேவைக் கொண்டாடும் கும்பலில் ஒருவரா? அவரும் அவரோடு வந்த அதிகாரிகளும் நடந்துகொண்ட போக்குகள் மற்றும் அணுகுமுறைகள் வன்மையான கண்டனத்துக்குரியது.

சமூகநீதி அரசின் கீழ் பணியாற்றும் காவல்துறையினர், மதவெறிபிடித்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களைப்போல நடந்திருப்பதை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் மதம் சார்ந்து செயல்படும் காவல்துறையினரின் இந்தப்போக்குக் கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத அடாவடிப்போக்கு மட்டுமின்றி, மதவாத நடவடிக்கையுமாகும். எனவே, மதசார்பின்மைக்கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x