Published : 31 Jan 2022 07:22 AM
Last Updated : 31 Jan 2022 07:22 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு உரிய இடங்களை மனமுவந்து ஒதுக்கீடுசெய்ய வேண்டும் என்று திமுகநிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின்கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வது, கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை பகிர்ந்தளிப்பது, வாக்குசேகரிப்பில் அனைவருடனும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கோடு செயல்படுவது என ஒவ்வொரு கட்டத்திலும் கட்சி நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், மிகுந்த பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.
மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான கட்சி நிர்வாகிகள், அவரவர்உள்ளாட்சிகளில் கூட்டணி கட்சியினருக்கு உரிய இடங்களை மனமுவந்து ஒதுக்கீடு செய்வதில் சுணக்கமின்றி செயல்பட வேண்டும். கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்த பிறகு, திமுக போட்டியிட உள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களை தேர்வு செய்வது போன்றநெறிமுறைகளுடன் கண்டிப்பானதாக இருக்க வேண்டும்.
பொதுநலம், கொள்கைப் பற்று
சுயநலம் தவிர்த்து, பொதுநலச் சிந்தனையும் கொள்கைப் பற்றும் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்கு தன்னை முழுமையாகவும் முழுநேரமும் அர்ப்பணித்துக் கொண்ட கட்சியினருக்கு வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை வழங்கவேண்டும். குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரை அவர்களை வேட்பாளராக தேர்வு செய்யக் கூடாது.
கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு, கட்சியினர் ஓய்வின்றி பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சியினர் போட்டியிடும் இடங்களிலும்முழுமையான ஒத்துழைப்பும், களப் பணியும் அமைதல் வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரையும் சந்திக்கும் வகையில், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்பு பணியை விரைவுபடுத்துங்கள். கடந்த 8 மாதங்களில் நமது அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அதனால் மக்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள், மகளிர்பெற்றுள்ள உரிமைகள், சலுகைகள், மாணவர்கள், உழவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரின் நலனுக்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரியுங்கள். ‘இது உங்களுக்கான அரசு’ என்பதை மக்களிடம் விளக்கி தெரிவித்து, நம்பிக்கையை பெற்றிடுங்கள்.
அமைதியான சூழலும், நல்லிணக்கமான வாழ்க்கையும் கொண்டதமிழக மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைதூண்டிவிட்டு, அதில் அரசியல்குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்.
மதவாத அரசியல்
மக்கள் நலனுக்கு எதிராக அதிமுகவும், பாஜகவும், மற்ற கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழகத்தை பாழ்படுத்த நினைப்பதை எடுத்துக் கூறுங்கள். மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழக மக்களின்தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள். இவ்வாறு அதில் முதல்வர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT