Published : 31 Jan 2022 09:15 AM
Last Updated : 31 Jan 2022 09:15 AM
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறது. இதற்காக, வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், முதல்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகள் மற்றும் சேலம் மாநகராட்சிக்கான 60 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களிலும் பாமக தனித்து போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தேர்தலில் மற்ற கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது கட்சி தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும். அடுத்ததாக மேயர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம்.
ஏற்கெனவே நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருந்து இன்னும் முன்னேற முயற்சி செய்து வருகிறோம். திமுக, அதிமுக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்வதை வரவேற்பதும், நல்லது செய்ததை சுட்டிக்காட்டுவதையும் பாமக செய்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது. இந்த தேர்தல் பாமகவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும், திருப்பு முனையாகவும் தேர்தலாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT