Published : 12 Apr 2016 04:18 PM
Last Updated : 12 Apr 2016 04:18 PM

மதுரையில் 6 புறநகர் தொகுதிகளில் பிரச்சாரத்தில் சிக்கல்: 2 மாவட்டச் செயலர்களும் போட்டியிடுவதால் அதிமுக வேட்பாளர்கள் தவிப்பு

மதுரையில் புறநகர், மாநகர் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மாநகர் பகுதிகளில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவதால், புறநகர் மாவட்டத்தில் இருக்கும் 6 தொகுதிகளில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ மேற்குத் தொகுதியிலும், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன்செல்லப்பா, வடக்குத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இருவரும் மாநகரத்துக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதால், புறநகருக்குட்பட்ட 6 தொகுதிகளில் வேட்பாளர்களின் பிரச்சாரம், தேர்தல் வியூகங்களை அமைப்பது, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிமுகவினர் கூறியதாவது: பிரச்சாரம், நிர்வாகிகளை பணிகளில் ஈடுபடுத்தி ஆதரவு திரட்டுவதில் மாவட்டச் செயலாளர்களின் பங்கு முக்கியமானது. மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தினால் மட்டுமே நிர்வாகிகள் சோர்வடையாமல் பணிபுரிவர். ஆனால், புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா, மாநகரில் போட்டியிடுவதால் அவர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே முழுக் கவனம் செலுத்த முடியும். அவரால் புறநகர் மாவட்ட 6 தொகுதிகளில் பிரச்சார பணிகளை மேற்பார்வையிடுவது, நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது கடினம்.

புறநகர் தொகுதிகளில் நடப்பு எம்எல்ஏக்களுக்கும், முன் னாள் எம்எல்ஏ-க்களுக்கும் சீட் வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் மட்டுமில்லாது சீட் கிடைக்காத மற்ற நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபட வைக்க வேண்டும். உசிலம்பட்டி தொகுதி, இந்த முறை அதிமுக கூட்டணியில் பார்வர்டுபிளாக் கட்சிக்கு ஒதுக்காததால், அங்கு செல்வாக்காக உள்ள அக்கட்சியினர் அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவர். அது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கலாம்.

திருமங்கலத்தில் வெளியூர்க்காரரான அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் மதுரை அதிமுக நிர்வாகிகளை அரவணைப்பதிலும், தேர்தல் வியூகம், பிரச்சாரப் பணிகளை செயல்படுத்துவதிலும் சிறப்பாகச் செயல்படுபவர் என்பதால் அந்த தொகுதியில் ஓரளவு அதிமுகவுக்கு பிரச்சினை இல்லை.

மற்ற 5 புறநகர் தொகுதி அதிமுக வேட்பாளர்களை மக்களிடம் அழைத்து சென்று ஆதரவு திரட்ட வேண்டும். சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களையும் சமாளிக்க வேண்டும். இப்பணிகளை மாவட்டச் செயலாளர்கள் அல்லது கட்சியின் மேலிட நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். இரு மாவட்டச் செயலாளர்களும் மாநகரில் போட்டியிடுவதால் புறநகர் பகுதி கள் தனித்து விடப்பட்டதாகவே தொண்டர்கள் கருதுகின்றனர். அதனால், புறநகர் பகுதிகளில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அதிமுகவில் தனிக்குழுக்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x