Published : 31 Jan 2022 09:26 AM
Last Updated : 31 Jan 2022 09:26 AM

‘நீட்’ தேர்வில் விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம்

தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான சட்டத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக அனுப்ப வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும்.

அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் காலதாமதம் செய்யாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இப்போராட்டத்துக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ்கஜேந்திரபாபு தலைமை வகித்தார்.

அமைப்பின் தலைவர் பி.ரத்தினசபாபதி அறிமுகவுரை ஆற்றினார்.யுஜிசி முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட், பேராசிரியர் அனில் சட்கோபால், முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி ஆகியோர் காணொலி வாயிலாக உரையாற்றினர். இதில் பங்கேற் றோர் பேசியதாவது:

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேலிக்குரியதாக ஆக்குகிறது. எனவே, நீட் தேர்வுதொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் உடனடியாக அனுப்ப வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சட்டப்பேரவை நிறைவேற்றுகிற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதுதான் ஆளுநரின் கடமை. அந்த மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்க முடியாது. ஆளுநர் வரம்பை மீறியுள்ளார்.

திருமாவளவன் (விசிக): நீட்மசோதா விஷயத்தில் தமிழக ஆளுநரின் செயல்பாடு மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் வகையில் உள்ளது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் நமது முதன்மை கோரிக்கையாக இருக்கவேண்டும். உயர்கல்வி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் அதிகாரமும், உரிமையும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக): மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமதிப்பதுபோல் ஆகும். மசோதாவில் குறைபாடு இருந்தால் அதை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): எந்தெந்த மாநிலங்கள் நீட் தேர்வை விரும்புகிறதோ அந்த மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வை பின்பற்றலாம் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. நீட் தேர்வைகுஜராத்தில் நுழையவிட மாட்டேன்என்று அம்மாநில முதல்வராக இருந்தபோது சொன்னவர்தான் இன்றைய பிரதமர் மோடி. இப்போது இரட்டை வேஷம் போடுகிறார்.

முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன், திமுக எம்எல்ஏக்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், எழிலன் உள்ளிட்டோரும் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலர் கே. சாமுவேல்ராஜ் போராட்டத்தை முடித்து வைத்தார்.

நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைப்பது தொடர்பாக மாலைக்குள் அறிவிப்பு வரவில்லை என்றால் தனிநபர் சத்தியாகிரகம் இருப்பதாக பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிவித்திருந்தார். உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தலுக்குப் பிறகு போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்ததனர். இதனால், சத்தியாகிரக போராட்ட முடிவை பிரின்ஸ் கஜேந்திர பாபு கைவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x