Published : 31 Jan 2022 10:59 AM
Last Updated : 31 Jan 2022 10:59 AM

கரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக வீட்டிலிருந்தே மின் கட்டணத்தை செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கரோனா பரவல் காரணமாக கோவையில் கடந்த ஓராண்டாக வீட்டிலிருந்தே மின் கட்டணத்தை செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் வாரியம் கணக்கெடுத்து வருகிறது. அந்த கணக்கின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் நுகர்வோர் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதில், பலர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறைக்கு மாறி வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக கோவையில் கடந்த ஓராண்டில் 8 லட்சம் பேர் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியுள்ளனர். எனவே, வீட்டிலிருந்தே மின்கட்டணம் செலுத்த கூடுதல் வசதிகளை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

இதுதொடர்பாக, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் கடந்த ஓராண்டில் சராசரியாக 1.33 லட்சம் பேர் இரு மாதங்களுக்கு ஒருமுறை ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மின் நுகர்வோர் வரிசையில் நின்று கட்டணத்தை செலுத்துவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு மாற்று வசதிகளை மின்வாரியம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மின்வாரிய செயலி, கூகுள் பே, பேடிஎம், போன்பே, பிம் செயலிகள் மூலம் நுகர்வோர் கட்டணத்தை செலுத்தலாம். கூகுள் பே வழியாக கட்டணம் செலுத்த அந்த செயலியில் ‘பில்ஸ்’ என்பதை கிளிக் செய்து, ‘எலக்ட்ரிசிட்டி’ என்ற தலைப்பின் கீழ் ‘டிஎன்இபி பேமண்ட்’ என்பதை அழுத்தி, நுகர்வோர் எண்ணை பதிவிட்டு, பெயரை சரிபார்த்து கட்டணம் செலுத்தலாம்.

எந்தவொரு வங்கியின் கடன் அட்டையையும் பயன்படுத்தி https://www.tnebnet.org/awp/login என்ற இணையதளம் வழியாகவும் கட்டணத்தை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்பட்ட மின் கட்டணங்களை மின்சார வாரிய இணையதளத்திலுள்ள ‘பயன்பாட்டு விவரங்கள்’ என்ற தொடர்பைக் கொண்டு கண்காணிக்கலாம். ஒவ்வொரு முறையும் இணையதள மூலம் பெறப்படும் மின் ரசீதை அச்சு எடுக்க வேண்டிய அவசியமில்லை. இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு கட்டண ரசீது மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். இணையதளம் மூலம் கட்டணம் செலுத்திய விவரங்கள் மின்வாரிய தகவல் தளத்தில் இருக்கும். எனவே, மின் பயனீட்டு கட்டண அட்டையில் கட்டண விவரத்தை குறிக்க வேண்டியதில்லை. நிலுவை கட்டணம் ஏதுமில்லாதபோது முன்பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. அது பிந்தைய மாதங்களில் வரும் கட்டணங்களில் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x