

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வின் உத்தரவுப்படி பாலக்காடு-கோவை வழித்தடத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஓய்வுபெற்ற கேரள முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஹரிகுமார் தலைமையிலான அந்தக் குழுவினர் கடந்த 2021 செப்டம்பர் 4-ம் தேதி மதுக்கரை ரயில்நிலையம் முதல் பாலக்காடு ரயில்நிலையம் வரை கள ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா பெற்றுள்ளார்.
50 மீட்டரில் சாய்வுதளம்
அதில் கூறியிருப்பதாவது: கோவை-பாலக்காடு ரயில் வழித்தடத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து 2021 மார்ச் வரை நடைபெற்ற 19 விபத்துகளில் மொத்தம் 24 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், 9 விபத்துகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிக்குள்ளும், 8 விபத்துகள் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள்ளும் நடைபெற்றுள்ளன.
இந்தப் பாதையில், ரயில் ஓட்டுநர்கள் பாதையை தெளிவாக பார்க்கும் வகையில் தண்டவாளத்தின் இருபுறமும் 10 முதல் 15 மீட்டர்வரை வரை உள்ள செடிகொடிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். தண்டவாளத்தின் ஒருபுறத்தில் இருந்து மற்றொருபுறம் யானைகள் எளிதாக கடந்து செல்லும் வகையில் அமைக்கப்படும் சாய்வுதளங்கள் குறைந்தபட்சம் 50 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்க வேண்டும். பி லைனில் வாளையாறு - எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே இரு இடங்களில் யானைகள் கடந்து செல்வதற்கு ஏதுவாக கீழ்மட்ட சுரங்க பாதைகள் (அன்டர்பாஸ்) அமைக்க வேண்டும். இதற்கான செலவை ஏற்றுக்கொள்ள ரயில்வே பரிசீலிக்க வேண்டும்.
பி லைனில் அதிக விபத்துகள்
2002 முதல் 2021 வரை நடைபெற்ற 19 விபத்துகளில் பி லைனில் 15 விபத்துகளும், ஏ லைனில் 4 விபத்துகளும் நடைபெற்றுள்ளன. எனவே, பி லைனில் இரவில் இயக்கப்படும் சில ரயில்களை ஏ லைனில் இயக்க செய்ய வேண்டும். கேரளாவில் ஆபத்தான 4.5 கி.மீ பாதை, தமிழக பகுதியில் விபத்து நடைபெறும் பகுதிகளில் சோலார் மின் வேலியை அமைக்க வேண்டும்.
ரயில்வே, வனத் துறைகள் இணைந்து ஆய்வு நடத்தி எந்தெந்த இடங்களில் தண்டவாளங்கள் மூலம் தடுப்புகள் அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். தமிழக பகுதியில் ரயில் ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில், போதுமான வெளிச்சம் தரக்கூடிய சோலார் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். ரயில் பயணிகள் தூக்கி எறியும் உணவுக் கழிவுகளும் தண்டவாளங்கள் அருகே யானைகள் வர காரணமாகின்றன. எனவே, அவ்வாறு தூக்கி எறியக்கூடாது என பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். உணவு, பிளாஸ்டிக் கழிவுகள் ஏதும் தேங்காத வகையில் பணியாளர்களை கொண்டு பாதை ஓரம் அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும். யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து விரட்ட தமிழக பகுதியில் கூடுதலாக 5 பணியாளர்களை நியமிக்க வேண்டும். தமிழக பகுதியில் ஏ லைனில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.