

சென்னை மாவட்டத்தில் தேர்தலை கண்காணிக்க கூடுதலாக 32 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாநகர கூடுதல் காவல் ஆணையர் சேஷசாய் ஆகியோர் கலந்துகொண்டு, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஏற்கெனவே பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் என 48 குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு அலுவலர்கள் இடம்பெற்ற 16 பறக்கும் படையினர், 16 நிலையான கண்காணிப்பு குழுவினர் என மொத்தம் 32 குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னை மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 2 பறக்கும் படை குழுவினர், 16 நிலையான கண்காணிப்பு குழுவினர், ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவினர் என 80 குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.