

சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், காசிமேடு, கலங்கரை விளக்கம், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை உயர்ந்திருந்தது.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால், சனிக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், இரவுநேரம், ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் மீன்களை வாங்க வந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தொடர்ந்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலையும் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.400-ல் இருந்து ரூ.600, சங்கரா ரூ.350-ல் இருந்து ரூ.600, நெத்திலி ரூ.350-ல் இருந்து ரூ.500, வவ்வால் ரூ.400-ல் இருந்து ரூ.800 என அனைத்து மீன்களின் விலையும் அதிகரித்திருந்தது.
சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். சென்னை முழுவதும் உள்ள மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகளில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.