

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் ஏரியைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி 8 கிராம எல்லைகளில் 2,591.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்குவந்தவாசி வட்டத்தில் உற்பத்தியாகும் கிளியாற்றில் இருந்தும், உத்திரமேரூர் பகுதியில் உற்பத்தியாகும் நெல்வாய் மடுவு மூலமும் தண்ணீர் வருகிறது.
இந்த ஏரியில் உள்ள 5 தலைப்பு மதகுகள் மூலம் 2,852.55 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகப் பயன்பெறுகின்றன. இங்கிருந்து செல்லும் நீர் 30 ஏரிகளின் கால்வாய் மூலம் செல்வதால் 4,751.90 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மொத்தம் 7,604.45 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. விளாகம்,முருகஞ்சேரி, முன்னூத்தி குப்பம், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முள்ளி, வளர்பிறை, கடப்பேரி, மதுராந்தகம் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூர்வாரப்படாமல் இருந்தது. இதைத் தூர்வார வேண்டும் என விவசாய அமைப்புகள் உட்படப் பலர் வலியுறுத்தி வந்தனர். கடந்த ஆட்சியில் ரூ.125 கோடியில் இந்த ஏரி தூர்வாரப்படும் என்று அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
ஆனாலும், முழுமையாக நிதி ஒதுக்கப்படவில்லை. தற்போதைய திமுக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து இந்த ஏரியைத் தூர்வார ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
ஏரியை ஆழப்படுத்தி 3,950 மீட்டர் நீளமுடைய கரையைப் பலப்படுத்துதல், ஆழப்படுத்த எடுக்கப்படும் மண்ணை எதிர்புறத்தில் உள்ள 1,482 ஏக்கர் நிலங்களில் கொட்டி உயர்த்துதல், வரத்துக் கால்வாய்கள், உபரிநீர் கால்வாய்களைத் தூர்வாருதல், ஏரியின் கரைஅருகே 1,650 மீட்டர் நீளத்துக்கு புதிய தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.
இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏரியில் முழுவதும் நீர் நிரம்பியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏரியைத் தூர்வாருவதற்காக ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டும் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் நீர்மட்டம் குறைந்த பிறகே தூர்வாரும் பணி தொடங்கும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயச் சங்கங்கள் கூறும்போது, "ஏரியில் தண்ணீர் குறைந்து தூர்வாரும் நேரத்தில் மறுபடியும் மழை வரலாம். எனவே, இப்போது இருக்கும் நிலையில் கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட சில முக்கிய பணிகளைச் செய்ய வேண்டும். ஏரியில் தண்ணீர் குறைந்த பிறகு தூர்வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தின.