

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
வேட்பு மனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் தேதியில் ஒரே நாளில் 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
வழக்கமாக, அரசியல் கட்சிகள் சார்பில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, மாற்று வேட்பாளராக வேறொருவரும் மனு தாக்கல் செய் வார். கடந்த ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவருக்கு மாற்று வேட்பாளராக கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் மனு தாக்கல் செய்தார். இம்முறையும் ஜெயலலிதா வுக்கு மாற்று வேட்பாளராக மதுசூ தனனே மனு தாக்கல் செய்வார் என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் பிரச்சார பயணம் மே 12-ம் தேதி முடிகிறது. அடுத்த 2 நாட்கள், அதாவது மே 13, 14 தேதிகளில் தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை அவர் சந்திப்பார் என கூறப்படுகிறது.