Published : 30 Jan 2022 05:54 PM
Last Updated : 30 Jan 2022 05:54 PM

ஈரோடு முன்னாள் எம்.பி பரமசிவன்: வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு ஆவின் நிறுவரும், ஈரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்கே பரமசிவன் உடல் நலக்குறை காரணமாக உயிரிழந்தார்.

ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் எஸ்கே பரமசிவம் (103). ஈரோடு மக்களவைத் தொகுதியில் 1962-1967ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யாக இருந்தவர். ஈரோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஸ்தாபகராகவும், ஈரோடு ஆவின் நிறுவனராகவும் திகழ்ந்தவர். பால் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தியதன் மூலம், கொங்கு மண்டலத்தில் வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர்.

முன்னாள் எம்பிக்களில் மூத்த எம்பியாக விளங்கிய எஸ்கே பரமசிவன், வயது மூப்பைப் பற்றிக் கவலைப்படாமல், ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் வாக்களித்து, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார். "தி இந்து" நாளிதழின் தீவிர வாசகரான எஸ்கே பரமசிவன், தனது 103வது வயதிலும், தவறாமல் நாளிதழைப் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

கூட்டுறவு அமைப்புகளில் தொடர்ந்து பொறுப்பு வகித்து, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் சென்று சேர காரணமாய் இருந்தவர். ஈரோடு பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள், அமைப்புகள் அவரது இடத்தில் செயல்படுவதுடன், மக்கள் பயன்பாட்டுக்கான பல்வேறு அலுவலகங்கள், அவரது நிலத்தில் செயல்படுகிறது. வயது மூப்பால், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த எஸ்கே பரமசிவன், நேற்று முன் தினம் இரவு (30-ம் தேதி) உயிரிழந்தார். அவரது தோட்டத்தில் இன்று மதியம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவையொட்டி, ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி ஆகிய இடங்களில் இன்று (31-ம் தேதி) மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு விவசாய அமைப்பினர், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் எஸ்கே பரமசிவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x