

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்துள்ளது. கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றுசுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 20-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை அரசு ஸ்டான்லிமருத்துவமனையில் நடைபெற்றதடுப்பூசி முகாமை சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனை டீன் பாலாஜி உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா பாதிப்புபடிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, 15 முதல் 20 மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்துள்ளது. ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்கள் சவாலாக உள்ளன. இந்த மாவட்டங்களில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் 5% பேர்
தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் மற்றும் மருத்துவமனைகளில் என 2 லட்சத்து 11 ஆயிரம் நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. புதுவகையான கரோனா பரவி வருகிறது என சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் பொதுமக்கள் நம்ப வேண்டும்.
கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடித்து முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே தொற்று பரவலைகுறைக்க முடியும் என மருத்துவவல்லுநர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தளர்வுகள் தரப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரயில் பயணத்துக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு கூறினாலும் தமிழகத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இதை தளர்த்துவது குறித்து ஆலோசனை செய்தே முடிவு செய்யப்படும்.
இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.