

தமிழக கடலோர நீர்நிலைகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வசித்து வருவதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வனத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
13 கடலோர மாவட்டங்கள்
தமிழ்நாடு வனத் துறை, மும்பைஇயற்கை வரலாற்றுச் சங்கம், இந்திய வன உயிரின நிறுவனம், பறவையியல் மற்றும் இயற்கை வரலாறுக்கான சலீம் அலி மையம்ஆகியவற்றுடன் இணைந்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 13 கடலோர மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டது.
இதன்படி, முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு கடந்த 28, 29-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 45 சமூகக் குழுக்கள், தொண்டு நிறுவனத்தினர், 10 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங் கேற்றனர்.
வனத் துறை தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர்குமார் நீரஜ் தலைமையில், 500-க்கும்மேற்பட்டோர் பங்கேற்ற இந்தக்கணக்கெடுப்பில், முதல்முறையாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரேட்டரே பிளெமிங்கோ வகை வெளிநாட்டுப் பறவைகள் இடம்பெயர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளுக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கோடியக்கரை பகுதியில் அதிகபட்சமாக 20 ஆயிரம் பறவைகளும், வாலிநோக்கம் பகுதியில் 10 ஆயிரம் பறவைகளும் காணப் பட்டன.
80 வகையான பறவைகள்
இருநாள் கணக்கெடுப்பில் 80 வகையான, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஏராளமான பறவைகள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை.
கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் தமிழகத்துக்கு கிடைத்த அதிகப்படியான மழை காரணமாக, அப்பறவைகள் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்து கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.