Published : 06 Apr 2016 09:57 AM
Last Updated : 06 Apr 2016 09:57 AM

தேமுதிகவில் குழப்பம் ஏற்படுத்த திமுக சதி: ம.ந. கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு

தேமுதிகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக ம.ந. கூட்டணி தலைவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

ம.ந.கூட்டணியில் இணைந்த முடிவை தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளாக இருந்த வி.சி.சந்திரகுமார், தேனி முருகேசன், சி.எச்.சேகர், பார்த்திபன் மற்றும் 5 மாவட்ட செயலாளர்கள் கூறியுள்ளனர். அவர்களை தேமுதிக தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இந்த சூழலில், தேமுதிகவிலிருந்து தங்களை நீக்க விஜயகாந்துக்கு அதிகாரம் இல்லை என்று அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பாக ம.ந.கூட்டணி தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு:

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)

கூட்டணிக்காக யாரையும் அழைக்கவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், கூட்டணிக்கு வராத தேமுதிகவை சிதைக்க திமுக முயற்சிக்கிறது. திமுகவின் இந்த திட்டம் பலிக்காது. விஜயகாந்துக்கு பின்னால் அவரது தொண்டர்கள் உள்ளனர். திமுக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது எடுபடாது.

ஜி.ராமகிருஷ்ணன் (சிபிஎம் மாநிலச் செயலாளர்)

கூட்டணிக்கு வராத காரணத்தால் மதிமுகவை உடைக்கும் வேலையில் திமுக ஈடுபட்டது. இப்போது தேமுதிக கூட்டணிக்கு வராததால் அந்தக் கட்சியையும் திமுக உடைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் பலிக்காது. திமுகவின் எண்ணம் நிறை வேறாது.

இரா.முத்தரசன் (சிபிஐ மாநிலச் செயலாளர்)

மதிமுகவை திமுக அணியில் இணைப்பதற்கு திமுக முயற்சித்து தோற்றதால், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களை அழைத்துச் சென்றது. இப்போது தேமுதிக கூட்டணிக்கு வராததால் தேமுதிகவை உடைக்கும் இழிவான செயலில் திமுக ஈடுபடுகிறது. தேமுதிக தானாக கரையும் என்று ஸ்டாலின் கூறியதை நாம் கவனிக்க வேண்டும். சந்திரகுமார் தேமுதிகவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கவில்லை. திமுகதான் போர்க்கொடியை அவர் கையில் கொடுத்துள்ளது. ஆனால், திமுகவின் எண்ணம் எதுவும் நிறைவேறாது.

தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்)

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேர்தல் நேரங்களில் இப்படி எதிர்ப்புகள் கிளம்புவதும், அதிருப்திகள் உண்டாவதும் சகஜமான ஒன்றுதான்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x