Published : 30 Jan 2022 06:20 AM
Last Updated : 30 Jan 2022 06:20 AM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தைதொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சு நடத்தும் வகையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மகளிர்அணி தலைவர் வானதி சீனிவாசன்ஆகியோர் நேற்று பிற்பகல் 12.30மணி அளவில் வந்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்புச்செயலாளர் வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பி.எச்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், பாஜக தரப்பில் தங்களுக்கு 30 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் எனவும், பாஜக எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளில் 4 அல்லது 5 மேயர் பதவிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கோரியதாகக் கூறப்படுகிறது. அதற்கு, 10 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்க இயலும் என்று அதிமுக தரப்பில் கூறியதாகத் தெரிகிறது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனை நடந்த நிலையிலும், வார்டு ஒதுக்கீடு, மேயர் இடம் குறித்து முடிவு எட்டப்படாமலேயே முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. எனவே, பேச்சு தொடரும் என்றுஇரு தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
பேச்சுவார்த்தை நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கிறது. கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி. அதேபோல, நகர்ப்புற பகுதிகளில் பாஜக வலிமையாக இருக்கிறது. அதை முன் வைத்து எங்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களை ஒதுக்கித் தருமாறு பேசி வருகிறோம்.
மக்கள் மத்தியில் திமுக அரசின் மோசமான நடவடிக்கைகளை முன் வைத்து பிரச்சாரம் மேற்கொள்வோம்.திமுக அரசு மீது மக்களுக்கு நிறைய அதிருப்தி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறும்போது, “பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. பேச்சுதொடர்ந்து நடைபெறும். சில இடங்களை கேட்டுள்ளனர். கேட்பது அவர்களது கடமை. அதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக முடிவு செய்யும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT