

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக,முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுகள் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அந்தந்த மாவட்டஅளவில் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் கூட்டணி கட்சியினர் கடந்த 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. எங்களுக்கு தேவையான வார்டு விவரங்கள் குறித்த பட்டியல்களை திமுக மாவட்டச் செயலாளர்களிடம் விசிக மாவட்ட முன்னணிபொறுப்பாளர்கள் வழங்கியுள்ளனர்.
போதிய இடம் ஒதுக்க வேண்டும்
இதற்கிடையே, ‘விசிகவுக்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும். மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளையும் வழங்கவேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் உறுதி
மேயர், துணை மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் இல்லாததால், எந்த மாநகராட்சியையும் குறிப்பிட்டு வேண்டுகோள் வைக்கவில்லை. வார்டு உறுப்பினர்கள் வெற்றிக்கு பிறகு, கோரிக்கைகள் வைக்கப்படும். ‘தேர்தல்முடியட்டும், உங்கள் கோரிக்கையை கவனத்தில் வைத்துக்கொள்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.