

அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலரும், அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஆர்.எம்.பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்.19-ல் தேர்தலும், பிப்.22-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.
இந்தத் தேர்தலுக்கு 80 ஆயிரம்போலீஸாரும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும். அவர்கள் தங்களதுவாக்குகளை தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக செலுத்திவிடுவர்.
ஆனால் வெற்றியும், தோல்வியும் சில வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படும் என்பதால் இந்த தபால் வாக்குகளில்தான் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவருகிறது. தபால் வாக்கு முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
எனவே நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கு தபால் வாக்கு முறைக்கு முழுமையாக விலக்குஅளிக்க வேண்டும். இதன்மூலம் அரசுக்கும் பண விரயமும், காலவிரயமும் தவிர்க்கப்படும்.
அத்துடன் தேர்தல் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களைத் தேர்தல் அலுவலர்களாக நியமிக்காமல், ஏற்கெனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த அலுவலர்களை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என அதில் கோரி உள்ளார்.
இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.